சேலம் மீன் கடையில் 24 நீர்க்காகங்கள்.. காவிரி ஆற்றங்கரையில் தோலை உரித்து.. கேட்கும்போதே நடுங்குதே

  • சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் சுற்றித்திரிந்த நீர்காகங்கள் விவகாரம் விஸ்வரூம் எடுத்துள்ளது.. கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு மீன் கடையில் என்ன நடந்தது? 24 நீர்காகங்கள் இந்த மீன் கடைக்கு எப்படி வந்தன? என்ற விவரமெல்லாம் இப்போது தெரியவந்துள்ளது.. இது தொடர்பான காவல்துறையினர், வனத்துறையினர் அதிரடியாக நடவடிக்கையையும் எடுத்துள்ளனர். என்ன நடந்தது?

    Advertisement

    சங்ககிரி அருகே கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பேரேஜ் சாலையில் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த மீன் கடைகளில் நீர்காகம் (Cormorant) இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட வன அலுவலர் யஸ்வந்த் அம்புல்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    Advertisement

    நீர்க்காகங்கள் விற்பனை

    இந்த தகவல் கிடைத்ததும், அவரது உத்தரவின்பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனவர் தினேஷ், வனக்காப்பாளர் விஜயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட மீன் கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினார்கள்..

    அப்போது ஒரு கடையில் 24 நீர்காகங்கள் கொல்லப்பட்டு, அவற்றின் இறைச்சி விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து, அதை விற்பனைக்கு வைத்திருந்த கோனேரிப்பட்டியை சேர்ந்த குஞ்சப்பன் மகன் சசிகுமார் (24) கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட நீர்காகங்களின் இறைச்சி பிறகு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதான சசிகுமாரிடம் விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசாரிடம் சசிகுமார் கூறினார்.

    Advertisement

    சேலம் சங்ககிரி மீன் இறைச்சி

    சங்ககிரி தேவூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் இருந்துதான், நீர்காகங்களை வேட்டையாடி பிடித்தார்களாம்.. பிறகு அந்த நீர்க்காகங்களின் தோலை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்ததாக சசிகுமார் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சசிகுமார் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வனத்துறையினர் வார்னிங்

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, கோனேரிப்பட்டி பேரேஜ் சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள காவிரி ஆற்றுப் பகுதிகளில் நீர்காகங்கள் அதிக அளவில் உள்ளன. இவற்றை ஒரு கும்பல் ரகசியமாக வலைவிரித்துப் பிடிப்பது, விஷப் பொருள்களைப் பயன்படுத்தி வேட்டையாடுவது போன்ற தொடர் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்..

    Advertisement

    வேட்டையாடப்படும் நீர்காகங்களின் தோலை உரித்து, அதன் இறைச்சியையும் விற்பனை செய்து வருகிறார்கள். அதனால், காட்டுப் பறவைகளை வேட்டையாடுவதும், அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதும் கடுமையான குற்றம்" என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்..

    உடனே போலீசுக்கு சொல்லணும்

    நீர்காகம் சாதாரணமாக ஆற்றங்கரையில் பார்க்கப்படும் ஒரு பறவை என்று நினைத்துவிட முடியாது. வனத்துறையின் அட்டவணைப்படுத்தப்பட்ட உயிரினங்கள் பட்டியலில், பறவைகள் பிரிவில் நீர்காகம் வரிசை எண் 164-ல் இடம்பெற்றுள்ளது. அதாவது, இது பாதுகாக்கப்பட வேண்டிய அட்டவணைப்படுத்தப்பட்ட பறவை இனமாகும். நீர்காகத்தைப் பிடிப்பதும், கொன்று சமைத்து சாப்பிடுவதும் சட்டப்படி குற்றமாகும்.

    இந்த நிலையில், நீர்ப்பறவைகள் வேட்டையாடப்படுவது அல்லது அவற்றின் இறைச்சி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள வனத்துறைக்கோ அல்லது உணவுப் பாதுகாப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    English Summary

    Salem Cormorant Meat.. 24 Cormorants Hunted Along Cauvery River Bank and Sold as Meat.. Shocking Detail