சேலம்: சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை வார்டுக்கு அழைத்துச் சென்ற போது உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் ஒருவர் ரூ 200 லஞ்சமாக வாங்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் கால் முறிவு ஏற்பட்ட நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து வார்டுக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நபரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்ல ஒரு ஊழியர் வரவழைக்கப்பட்டார். அவர் லிப்ட்டில் வைத்து அந்த நபரை வார்டுக்கு கொண்டு செல்லும் போது நோயாளியின் உறவினர்களிடம் ரூ 200 லஞ்சமாக பெற்றார். இதை யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர். அதாவது லிப்ட்டில் நோயாளியை அழைத்து வரும் அந்த ஊழியர், உறவினர்களிடம், "கொஞ்சம் பார்த்து செய்ங்க" என்கிறார். உடனே அங்கிருந்த பெண், பர்சில் இருந்து காசு எடுக்கிறார். அப்போது அந்த ஊழியர், "நான்தான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனே, பணத்தை எடுத்து வைத்திருக்கலாம்ல" என்கிறார். அதற்கு அந்த பெண், "எடுத்து வைத்திருக்கிறேன் அண்ணா" என சொல்ல, அதற்கு அந்த ஊழியர், "எங்க வச்சிருக்க.. "என கேட்டபடியே அந்த பெண் கையில் இருந்த ரூ. 100-யை பார்த்து, இதை நீயே வச்சுக்கம்மா, 7, 8 பேர் வேலை செய்கிறார்கள் என கோபித்துக் கொள்வது போல் கோபித்து, அந்த ரூ 100 -ஐ வாங்கிக் கொண்டே, இன்னும் ஒரு 100 ரூபாய் கொடும்மா என கேட்கிறார். உடனே அந்த பெண்ணும் அவருடன் இருந்த ஆணும், அதெல்லாம் இல்லைங்கண்ணா! நாங்கள் ஏழைபட்ட ஜனம்.. என கெஞ்சியபடியே மறுக்கிறார்கள். அதற்குள் இவர்கள் இறங்க வேண்டிய மாடிக்கு லிப்ட் வந்துவிட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. வாங்குவது லஞ்சம், இதில் முன்னாடியே பணத்தை எடுத்து வைத்திருக்கணுமாம். அதிலும் பணத்தையும் வாங்கிக் கொண்டு அந்த பெண்ணை ஒருமையில் நீ, வா போ என அந்த ஊழியர் பேசுகிறார். அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டதாலும் நோயாளியை ஷிப்ட் செய்வதாலும் அந்த ஊழியர் அவர்களை மிரட்டும்தொனியில் பேசுவதும்,அதற்கு அந்த உறவினர்கள் வேறு வழி இல்லை என்பதால் கெஞ்சுவதும் கொடூரமாக இருக்கிறது என சமூகவலைதளவாசிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் தவெக அரசு வந்ததும் லஞ்சம், ஊழல் ஒழிந்துவிட்டதாக முதல்வர் விஜய் முதல் தவெக நிர்வாகி வரை பெருமிதத்துடன் சொல்கிறார்கள். தவெக அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வுக்கு சென்று பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க கூடாது என்றும், லஞ்சம் கேட்டால் இது எங்க அண்ணன் ஆட்சி, எங்க தம்பி ஆட்சினு சொல்லுங்கன்னு விஜய் சொன்னாரே அப்படியெல்லாம் சொல்ல முடியுமா? மருத்துவமனை ஊழியர் 7 ,8 பேருக்கு என கேட்டு ரூ 200 வாங்குகிறார். ஒரு நாளைக்கு அந்த 8 பேரும் சேர்ந்து தலா ஒரு நோயாளிடம் இருந்து ரூ 200 வாங்கினார் ரூ 1600 கிடைக்கும். இதில் ஆளுக்கு 200 ரூபாய் பங்கிட்டுக் கொள்வார்கள். தலா ஒரு நோயாளியிடமே இப்படி என்றால் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இவர்கள் எவ்வளவு சம்பாதித்தார்களோ தெரியவில்லை. தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக வாட்ஸ்ஆப் எண், இமெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. எனவே யாராவது லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். அது போல் dvac@nic.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இனியாவது இது போல் ஏழை மக்களை சுரண்டி அவர்களிடம் இருந்து ரூ 100, 200 ஐ கூட பறிக்க நினைப்போருக்கு பணத்தை கொடுக்காமல் புகார் கொடுத்து அந்த நபர் மீது கரும்புள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.