சேலம் 2.5 ஏக்கர் நிலமும் தரல, 30 ரூபாயும் தரல.. பாட்டி மீது கத்தியுடன் பாய்ந்த 16 வயது சிறுவன்

  • சேலம்: சேலத்தில் தாய் தகப்பனை இழந்த ஆதரவற்ற 16 வயது சிறுவனை, பாதுகாத்து அரவணைத்து வளர்த்து வந்துள்ளார் பாட்டி.. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையை நிமிர்த்தும் என்பதால், பேரனை நன்றாக படிக்க வைக்கவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், வெறும் 30 ரூபாய்க்காக ஒரு உயிர் போயுள்ளதுடன், சிறுவனின் எதிர்காலமும் சேர்ந்தே பாழாகியுள்ளது.. என்ன நடந்தது சேலத்தில்?

    Advertisement

    சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில், பெற்ற பாட்டியையே 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்துள்ளது கொங்கணாபுரம் கரட்டுவளவு பகுதி.. இங்கு வசித்து வரும் மூதாட்டி கந்தாயி. 75 வயதான இவருக்கு மூன்று மகள்களும், சுப்பிரமணி என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    எல்லாருக்கும் கல்யாணமாகி விட்டது.. தனித்தனியாக அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.. இதில், சுப்பிரமணியும் அவரது மனைவியும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து விட்டனர்.. அதனால் ஆதரவற்ற அவர்களது 16 வயது மகனை, பாட்டி கந்தாயி வளர்த்து வந்தார்..

    நிலம் - சொத்து தகராறு

    பேரன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் உறவினரான அபிஷேக் என்பவருடைய வீட்டில் தங்க வைத்திருந்தார்.. ஆனால், பேரனுக்கு படிப்பு ஏறவில்லை.. அதனால் 9ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டான்.. இவர்களது உறவினர்கள் டெல்லியில் இருப்பதால், அவர்களை பார்ப்பதற்காக அடிக்கடி டெல்லி சென்று வருவானாம்.. அப்படித்தான் கடந்த 20 நாட்களுக்கு முன்பும் டெல்லி சென்று, கொங்கணாபுரம் கரட்டுவளவுக்கு திரும்பி வந்தான்..

    Advertisement

    இந்நிலையில்,கொங்கணாபுரம் பகுதியில் தாத்தா கந்தசாமியின் பெயரில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில், தனக்குரிய பாகத்தை பிரித்து தருமாறு பாட்டி கந்தாயியிடம், பேரன் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பேரனுக்கு 16 வயதுதான் ஆகிறது என்பதாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நிலத்தை பிரிக்க பாட்டி கந்தாயி மறுப்பு சொல்லி உள்ளார்.. இதனால் பேரனுக்கு பாட்டிமீது ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் நேற்று மாலை பாட்டி கந்தாயியிடம், செலவுக்கு 30 ரூபாய் பணம் கேட்டுள்ளான்... ஏற்கனவே நில விவகாரத்தில் கோபமாக இருந்த பாட்டி, பணம் தர முடியாது என்று கறாராக சொல்லி உள்ளார்..

    Advertisement

    கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும்

    இதனால் மேலும் ஆவேசமடைந்த சிறுவன், வீட்டிலிருந்த கட்டையை கொண்டுவந்து, பாட்டி கந்தாயியின் பின்மண்டையில் ஓங்கி அடித்து விட்டான்.. இதில் பாட்டி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.. ஆனால், அப்போதும் பேரனுக்கு ஆத்திரம் போகவில்லை.. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாட்டியின் கழுத்து, வயிறு என உடம்பெங்கும் சரமாரியாக குத்தி விட்டான்.. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொஞ்ச நேரம் கழித்து, உறவினர் அபிஷேக் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. கந்தாயி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக பாட்டியை இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.. ஆனால் கந்தாயியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    Advertisement

    போலீஸ் ஸ்டேஷனில் சரண்

    இதனிடையே, பாட்டியை கொன்ற 16 வயது சிறுவன், நேராக கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பாட்டியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டேன் என்று சொல்லி சரணடைந்து விட்டான். இதைக்கேட்டு அதிர்ந்த சங்ககிரி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் கொங்கணாபுரம் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    உயிரிழந்த கந்தாயியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெறும் 30 ரூபாய் பணத்திற்காக, 16 வயது பேரனே பாட்டியை கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும்
    கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை சேலத்தில் உண்டுபண்ணி வருகிறது...!!

    English Summary

    Salem Horror: 16-Year-Old Boy Allegedly Stabs Grandmother After Being Denied ₹30 and 2.5 Acres of Land