50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை

  • சேலம்: சேலம் மாநகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப்பெண்களை பாலியல் வணிகத்தில் உள்ளாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ்செயலை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

    Advertisement

    சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், " சேலம் மாநகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை மணிகண்டன் என்பவர் ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் அப்பெண்களை பாலியல் வணிகத்தில் உள்ளாக்கியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ்செயலை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    Advertisement

    இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் மணிகண்டன் பெண்களை மிரட்டி பாலியல் வணிகத்தில் தள்ளியுள்ளதால் இதன் பின்புலமாக மேலும் பலர் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுகிறது.

    எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதோடு, அவர்கள் குறித்த தகவல்களை கசியவிடாமல் பாதுகாக்கவும், இன்னும் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமெனவும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

    Advertisement

    குற்றம் சாட்டப்பட்ட நபர் தவெக கட்சியை சேர்ந்தவர் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அது உண்மையாக இருப்பின் அவரை கட்சியிலிருந்து நீக்குவதுடன் எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி விசாரணை நேர்மையாக நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    Advertisement

    ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது.

    மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ?

    எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மணிகண்டனுக்கும், தவெக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

    English Summary

    salem Manikandan Case: CPM and AMMK urge Vijay to demand a CB-CID probe and the arrest of all the accused.