பொய் சொல்லி ஏமாத்திடாங்க கண்ணீருடன் புகாரளித்த மாணவர்கள்.. ஆர்ஆர் ஹோட்டல் உரிமையாளர் தந்த விளக்கம்

  • சேலம்: பிரபல சேலம் ஆர்ஆர் பிரியாணி பெயரில் நடத்தப்படும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரியில் படித்த மாணவர்கள் சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தனர். தங்களுக்கு வெளிநாட்டில் வேலை, படிக்கும்போதே சம்பளம் என சொல்லி ஏமாற்றிவிட்டதாகவும் கல்லூரி சான்றிதழை தர மறுப்பதாகவும் புகாரளித்திருந்த நிலையில், இது தொடர்பாக உரிமையாளர் தமிழ்செல்வன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் டிரெண்ட் ஆனவர்களில் ஒருவர் சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்செல்வன். சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறிய சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தான் கடந்து வந்த பாதை குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவார். இவரது பேச்சு பலருக்கும் உத்வேகம் தருவதாகவே இருந்துள்ளது.

    Advertisement

    சேலம் ஆர்ஆர்

    இதற்கிடையே இப்போது இவரது பெயரில் செயல்பட்ட ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரி தான் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.. வெளிநாட்டு வேலை, படிக்கும்போதே கை நிறைய சம்பளம் என சொல்லி தங்களை ஏமாற்றிவிட்டதாக மாணவர்கள் புகாரளித்துள்ளனர். இப்போது கல்வி, சான்றிதழ், வேலை என அனைத்தையும் இழந்து தவிப்பதாகவும் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரிம்ஸ் கல்லூரி வளாகத்தில் ஆர்ஆர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் பல மாணவர்கள் சேர்ந்தனர்.. கல்லூரியில் படிக்கும் போதே சம்பளம், வெளிநாடுகளில் வேலை, 5 நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி என கல்லூரியில் சேரும்போது தங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மாணவர்கள் புகார்

    தொடக்கத்தில் 3 மாதங்கள் அனைத்தும் சிறப்பாகவே போனதாகவும் அதன் பிறகு இலவசம் என கூறிய விஷயங்களுக்கும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், பார்ட் டைம் வேலையில் தங்களுக்கு கிடைத்த சம்பளத்தில் ஒரு பகுதியை கல்லூரி நிர்வாகமே எடுத்துக்கொண்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சில மாதங்களிலேயே கல்லூரி வசதிகளும் படிப்படியாக குறைந்து, மிக மோசமாக போய்விட்டதாக விமர்சித்தனர்.

    இதை எல்லாம் விட மிக பெரிய அதிர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கூட முடியாத நிலையில் கல்லூரி முழுமையாக மூடப்பட்டுள்ளது. கல்லூரி கட்டிடமே இடிக்கப்பட்டு வெறிச்சோடிய நிலையில் இருப்பதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது கல்விச் சான்றிதழ்கள், கோர்ஸ் கம்பிளிஷன் உள்ளிட்ட ஆவணங்களையும் தராமல் அலைக்கழிப்பதாக்கவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இதன் காரணமாக வேறு கல்லூரிகளில் சேரவோ, வேலைக்கு விண்ணப்பிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    விளக்கம்

    இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ஆர்ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்செல்வன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில்.. இந்த விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என்றும் இப்போதுதான் தனது கவனத்திற்கு இந்த விவகாரம் எடுத்து வரப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும், "முதலில் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தவறுக்கு நானே பொறுப்பேற்று, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுத் தர நானே நடவடிக்கை எடுக்கிறேன். கல்லூரி தொடங்கிய போது எனக்கு கிருஷ்ணகிரியில் தொடங்குவதில் உடன்பாடு இல்லை, சென்னையிலேயே தொடங்க விரும்பினேன். ஆனால், என் நண்பர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முயற்சியால் இது தொடங்கப்பட்டதால், எனது நேரடி பார்வையில் இது இருக்கவில்லை.

    Advertisement

    உரிய நடவடிக்கை

    லண்டன் அல்லது அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக நான் எங்கும் கூறவில்லை. எனது சொந்த நிறுவனங்களில் உள்ள ஆள் பற்றாக்குறையைப் போக்கவும், மாணவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்கவுமே இந்தத் திட்டம் கருதப்பட்டது. என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன். மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், விரைவில் உங்களுக்கான சான்றிதழ்கள் ஊடகங்களின் முன்னிலையிலேயே வழங்கப்படும்" என்றார்.

    English Summary

    Students of the RR Hotel Management and Catering College have accused the institution of failing to deliver promised jobs(சேலம் ஆர்ஆர் பிரியாணி ஹோட்டல் சர்ச்சை): Salem RR Biryani controversy latest news in tamil.