மற்றொரு அதிர்ச்சி.. சேலம் அருகே நீட் தேர்வு காரணமாக மாணவி விபரீத முடிவு!

  • சேலம்: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனு கீர்த்தனாவைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா, நீட் மறுதேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி கோபிகா. அவருக்கு வயது 20. 2024 ஆம் ஆண்டு சேலம் அரசு கோட்டை மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அவர், மருத்துவப் படிப்பு படிப்பதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வை எழுதி இருந்தார் மாணவி கோபிகா. எனினும் நீட் தேர்வில் வினாத்தாள் மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து வரும் 21ஆம் தேதி நீட் மறு தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வு அச்சம் காரணமாக கோபிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்வை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்த மாணவி கோபிகா மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனிமையில் இருந்த கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    நீட் மறு தேர்வு நாள் நெருங்கி வரும் சூழலில், மாணவி கடுமையான மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கோவையில் ஒரு மாணவி, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட நிலையில், சேலம் மாவட்ட மாணவி ஒருவரும் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    The incident in which Gopika, a student from Salem district, died by suicide due to the fear of the NEET re-examination has caused a major shockwave.