எம்எல்ஏவை மீறி என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க.. சேலம் தவெக எம்எல்ஏ மீது பகீர் புகார்

  • சேலம்: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்நிலையில் சேலத்தில் தவெக எம்எல்ஏ சிவகுமார் மக்களை மிரட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது. நிலம் கேட்டு கொடுக்காததால் பகிரங்கமாக மிரட்டுவதாக எம்எல்ஏ மீது புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து இரு தரப்பும் விளக்கம் அளித்துள்ளனர்.

    Advertisement

    சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே நில உரிமையாளர்கள் சிலர் கழிவுநீர் கால்வாயை சிமென்ட் மூலம் மூடியுள்ளனர். தகவலறிந்து வந்த சேலம் வடக்கு தவெக எம்எல்ஏ சிவக்குமார், அவர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். எம்எல்ஏ 20,000 சதுரடி கேட்டு தராத ஆத்திரத்தில் மிரட்டி சென்றதாக நில உரிமையாளர் செந்தில் குமார் புகார் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    எவன் புகார் கொடுத்தான்..

    எம்எல்ஏ சிவக்குமார் நில உரிமையாளர்களிடம், "எவன் புகார் கொடுத்தான் வரச்சொல்லு. உதவி பொறியாளரை வரச்சொல்லு. செய்ய வேண்டாம் செய்ய வேண்டாம்னு சொல்லறேன். நீங்க பாட்டுக்கு நான் ஊரில் இல்லாதபோது செய்துட்டே இருக்கீங்க. நான் தான் சொல்லிட்டே இருக்கேன். நான் கமிஷனரிடமும் பேசியிருக்கேன். என்னை மீறி செய்ய கூடாதுனு சொல்லிருக்கேன். என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க" என்று கோபமாக பேசினார். மேலும் தன் ஆதரவாளர்களிடம் எல்லாம் எடுத்து போடுங்கடா என கூறினார்.

    "இதை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும். நான் எம்எல்ஏ. சொல்லற மரியாதைக்கு செஞ்ச செய்யுங்க. இது யார் வீட்டு ரோடு" என்றும் அவர் தகாத வார்த்தைகளில் ஒருமையில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து நில உரிமையாளர் செந்தில்குமார் கூறுகையில், "தவெக எம்எல்ஏ சிவக்குமார் கடந்த 4 மாதங்களாக நிலம் கேட்டார். அதை கொடுக்கவில்லை என்பதால் தன் ஆதரவாளர்களுடன் வந்து மிரட்டி பிரச்சனை செய்கிறார்" என்று கூறினார்.

    Advertisement

    நிரூபிக்க சொல்லுங்க

    இதுகுறித்து சிவகுமார், "நாங்கள் ஆட்சிக்கு வந்தே 4 மாதங்கள் தான் ஆகிறது. அவர்கள் யாரென்றே எங்களுக்கு தெரியாது. நான் ஒரு ரூபாய் யாரிடமாவது பணம் கேட்டேன் என்று நிரூபிக்க சொல்லுங்க. சாக்கடையை முழுமையாக மூடியதற்காகவே அவர்களிடம் கேட்டேன். சிமென்ட் தளத்தால் மூடிவிட்டால் அடைப்பு எடுக்க முடியாது என்பதால் பேசினேன். அவர்களிடம் பணம், நிலம் எதுவும் கேட்கவில்லை" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து சிவகுமார் சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடமும் முறையிட்டார். "நான் கமிஷனரிடமே சொல்லிவிட்டேன். அவரிடம் அனுமதி வாங்காமல் யார்யா போடறது. கமிஷனரே போட வேண்டாம் என்கிறாராம். இதை மீறி செய்தால் வழக்கு பதிந்து கைது செய்வோம். அதிகாரிகளை விட்டு சிமென்ட் தளத்தை இடிக்க சொல்லுங்க" என்று சிவகுமார் கூறினார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A viral video shows Salem North TVK MLA Sivakumar allegedly threatening landowners over a blocked drainage channel, while the landowner claims the MLA demanded 20,000 sq ft of land. Sivakumar has denied the allegations, saying he confronted them only for covering the sewage channel with cement.