நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு? சேலம் வரும் முதல்வர் விஜய்.. தொடர் ஆய்வில் அரசு அதிகாரிகள்!

  • சேலம்: நாளை மறுநாள் மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் விஜய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் அதிகரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

    Advertisement

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலமாக சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    Advertisement

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் சோகம் அடைந்தனர். தற்போது சம்பா சாகுபடி நெருங்கிவிட்ட சூழலில், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்பதே விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 88 அடியை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் முதல்வர் விஜய் மேட்டூர் அணையை நாளை மறுநாள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் பாதுகாப்பு தொடர்பாக மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    முதல்முறையாக மேட்டூர் அணையை திறக்க முதல்வர் விஜய் சேலம் வரவுள்ளார். இதனால் சேலம் மாவட்ட தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 88.43 அடியாகவும், நீர் இருப்பு 50.87 டிஎம்சியாகவும் உள்ளது.

    English Summary

    Vijay: As per sources Chief Minister Vijay to Open Mettur Dam for Irrigation Day After Tomorrow