பேய் நகரம்.. சிங்கப்பூர் அருகே கடலுக்கு போன ரூ.9.54 லட்சம் கோடி.. எல்லாமே சுத்த வேஸ்ட்!

  • சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு அருகே மலேசியா நாடு ஒரு பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்க முயற்சி செய்தது. இது சிங்கப்பூருக்கு இணையாக ஒரு சர்வதேச நகரமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உண்மையில் இது பேய் நகரமாகவே மாறியுள்ளது. என்ன நடந்தது.. கனவு நகரம் இப்படி மாறியது எப்படி என்பது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    கடலுக்கு நடுவே ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரம்மாண்ட கனவுடன் தொடங்கப்பட்ட மலேசியாவின் பாரஸ்ட் சிட்டி, தற்போது எதிர்பாராத காரணத்துக்காக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த நகரில் ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என அனைத்தையும் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் குடியேறாததால், இன்று அது வெறிச்சோடி காணப்படுகின்றன.

    Advertisement

    பேய் நகரம்

    கிட்டத்தட்ட பேய் நகரம் போல மாறிவிட்டதாம். அதாவது மக்கள் யாருமே வராததால் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது. மேலும், காலியாக கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை மோசடி கும்பல்கள் தங்களது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்தது மலேசிய போலீஸ் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் இந்த பாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்த இரண்டு மோசடி கும்பல்களை குறிவைத்து மலேசிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 32 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 335 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் கிரிப்டோகரன்சி தொடர்பான முதலீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்கால நகரமாக உருவாக்கப்பட்ட பாரஸ்ட் சிட்டி மோசடி நகரமாக மாறியுள்ளது.

    Advertisement

    பாரஸ்ட் சிட்டி

    இந்த பிரம்மாண்ட பாரஸ்ட் சிட்டி திட்டம் 2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2016ல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. சீனாவின் மிக பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான கன்டரி கார்டன் மற்றும் மாகாண அரசு இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கின. சிங்கப்பூருக்கு அருகில், கடலில் இருந்து நிலத்தை மீட்டு உருவாக்கப்பட்ட இந்த நகரம், பசுமையான ஸ்மார்ட் சிட்டியாக வடிவமைக்கப்பட்டது. 2035-ம் ஆண்டுக்குள் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமாக பாரஸ்ட் சிட்டி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கின் அருகே கூட நெருங்கக்கூட முடியவில்லை.

    Advertisement

    மொத்தம் 4 தீவுகளை கட்டி முடிக்க திட்டமிட்டனர். அதில் இப்போது ஒரு தீவு மட்டுமே முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த திட்டத்தில் சுமார் 15 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்ட பகுதிகளில் வெறும் 1 சதவீதம் மட்டுமே மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளன.. அதில் இப்போது சுமார் 9,000 பேர் மட்டுமே அங்கு வசிப்பதாக கூறப்படுகிறது.

    தோல்விக்கு காரணம்

    பிரம்மாண்ட கனவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பாரஸ்ட் சிட்டி தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கடலில் இருந்து நிலத்தை மீட்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆரம்பத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்த திட்டத்தில் வீடு அல்லது சொத்து வாங்கும் பெரும்பாலான நபர்கள் சீனாவை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்றும் உள்ளூர் மக்கலுக்கு லாபமில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்று மற்றும் கடுமையான நிதி நெருக்கடி ஆகியவை திட்டத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தின.

    Advertisement

    மலேசியா அரசு

    எனினும், இந்த பாரஸ்ட் சிட்டியை மலேசிய அரசு கைவிடவில்லை. பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான அரசு இந்த நகருக்கு மீண்டும் முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. மலேசியா சிங்கப்பூர் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவது, பாரஸ்ட் சிட்டியை கடந்து செல்லும் வகையில் போக்குவரத்து திட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

    2024ல் பாரஸ்ட் சிட்டியை வரி இல்லா தீவாக அறிவிக்கும் சட்டத்தையும் மலேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மக்களை இந்த நகருக்கு அழைத்து வர இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். இருப்பினும், அது வெற்றி பெறுமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான எதிர்கால நகரம் என்ற கனவுடன் உருவாக்கப்பட்ட பாரஸ்ட் சிட்டி, இன்று வெறிச்சோடிய கட்டிடங்கள், காலியான சாலைகளும் நிறைந்துள்ளன

    English Summary

    Malaysia ambitious $100 billion Forest City project near Singapore was envisioned as a futuristic international city(மலேசியா உருவாக்கிய பிரம்மாண்ட பாரஸ்ட் சிட்டி): All things to know about Malaysia Forest City.