சென்னை: உலகெங்கிலும் உள்ள புலம் பெயர் தமிழர்கள் மற்றும் புதிய தலைமுறை மாணவர்கள், தாய்மொழியான தமிழை மிக எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்கும் வகையில் www.sorkkal.com என்ற புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'Infocom Consultants' இந்த பிரத்யேகக் கற்றல் தளத்தை உருவாக்கியுள்ளது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க (சிங்கப்பூர் கிளை) செயலாளரும், கணிதப் பேராசிரியருமான பி.எம்.ஏ. அமானுல்லாஹ் இந்த நவீன தளத்தை முழுமையாக வடிவமைத்துள்ளார். இன்றைய டிஜிட்டல் தலைமுறையினர் சலிப்பின்றி கற்கும் வகையில், நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் துணையுடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், 40-க்கும் மேற்பட்ட Interactive கணினிப் பயிற்சி விளையாட்டுகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் மற்றும் சொல்வளம் போன்றவற்றை விளையாட்டுகளின் வாயிலாக எளிதில் புரிந்து கொண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. இத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தவித முன் பதிவோ அல்லது மாதாந்திர சந்தாக் கட்டணமோ தேவையில்லை; முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் ஆர்வத்தை ஊட்டவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கவும் இது ஒரு சிறந்த டிஜிட்டல் கருவியாக அமைந்துள்ளது. கணினி மட்டுமின்றி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற அனைத்து டிஜிட்டல் திரைகளிலும் மிக எளிதாக இயங்கும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்திலேயே சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையே 'சொற்கள்' தளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகத் தமிழர்களை டிஜிட்டல் வழியில் இணைக்கும் இத்தளத்தைப் பயன்படுத்த விரும்புவோர் www.sorkkal.com என்ற முகவரியைப் பார்வையிடலாம்.