சிங்கப்பூர்: உலகின் மிக சிறந்த ஏர்லைன்களில் ஒன்றான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது இங்கிலாந்தை சேர்ந்த 74 வயது பெண் வழக்கு போட்டுள்ளார். விமானம் டர்புலனஸில் சிக்கி குலுங்கிய போது, தனது கணவர் உயிரிழந்ததாகவும் தனக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லி, இழப்பீடு கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பொதுவாகவே மிகவும் பாதுகாப்பான ஒரு பொது போக்குவரத்து முறையாக விமான பயணங்கள் உள்ளன. இருப்பினும், சில நேரங்களில் நமது கையை மீறியும் கூட மோசமான விபத்துகள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த லிண்டா கிச்சன்.. இவரும் இவரது கணவரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது விமானம் எதிர்பாராத விதமாக நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது டர்புலன்ஸில் சிக்கியுள்ளது. இதில் அவரது கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் லிண்டாவுக்கு முதுகுத்தண்டில் கடுமையான காயம் ஏற்பட்டது. 73 வயதான அவரது கணவர் ஜியோஃப் கிச்சனின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் லிண்டா வழக்கு தொடர்ந்துள்ளார். முதுகு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மற்றும் இனிமேல் வாழ்க்கையை நடத்த தேவைப்படும் செலவுகளை சமாளிக்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ஜியோஃப் மற்றும் லிண்டா கிச்சன் ஆகியோர் 2024 மே மாதம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் SQ321 விமானத்தில் பயணம் செய்தனர். மியான்மர் வான்வெளியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது கடுமையான டர்புலன்ஸில் விமானம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விமானம் சில விநாடிகள் திடீரென சரிந்துள்ளது. சுமார் 5 நொடிகளில் அந்த விமானம் 178 அடி வரை சரிந்ததாக கூறப்படுகிறது. திடீரென விமானம் டர்புலன்ஸில் சிக்கியதால் உள்ளே இருந்த பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். குறிப்பாக லிண்டா பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது முதுகுத்தண்டில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் 10 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பின்னர், மேல்சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரது கணவர் ஜியோஃப்பும் அவர் மீது விழுந்துள்ளார். இதனால் லிண்டாவால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. பின்னர் இரண்டு பயணிகள் வந்து அவருக்கு உதவியுள்ளனர். டர்புலனஸில் சிக்கி விமானம் குலுங்கியதில் ஜியோஃப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விமானத்தின் எமர்ஜென்சி எக்ஸிட் அருகே கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு மருத்துவர் அவருக்கு சிபிஆர் அளித்தார். இருப்பினும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. லிண்டாவுக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்ட நிலையில், ஜியோஃப் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்தே இந்த சம்பவம் தொடர்பாக லிண்டா இழப்பீடு கோரியுள்ளனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது, இதை தடுக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். லிண்டா குடும்பத்தினர் இப்போது இருவேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஒன்று லிண்டாவின் காயங்களுக்காகவும், மற்றொன்று ஜியோஃப்பின் மரணம் தொடர்பாகவும் இழப்பீடு கோரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது மேலும் பல பயணிகளும் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். பல பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.விபத்து
என்ன நடந்தது!
மாரடைப்பு
இரண்டு வழக்குகள்