சிங்கப்பூர்: பொதுவாக இளசுகள் டேட்டிங் செயலி மூலமாகவே டேட் செய்வார்கள். ஆனால், சிங்கப்பூரில் இனி டேட்டிங் ஆப்களில் இருந்து மட்டுமல்ல, அரசிடம் இருந்தும் கூட மேட்ச்குறித்த நோட்டிபிகேஷன் வரலாம். சிங்கப்பூர் நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் இப்போது மக்கள் தொகை சரிவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நிலைமையை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே சிங்கப்பூர் அரசு வினோதமான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. அதாவது சிங்கப்பூர் அரசே புதிய டேட்டிங் செயலியை உருவாக்கியுள்ளது.
திருமண வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கை துணையை தேட உதவும் வகையில், சிங்கப்பூர் அரசு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதற்காக அந்நாட்டின் அரசு தொழில்நுட்ப அமைப்பு "பர்ஸ்ட் டேட்' என்ற மேட்ச்மேக்கிங் தளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இது அனைவருக்கும் கிடைக்கும் வழக்கமான டேட்டிங் ஆப் கிடையாது. 21 முதல் 35 வயதுக்குட்பட்ட திருமணமாகாத அரசு ஊழியர்கள் மட்டுமே இதை யூஸ் செய்ய முடியும்! டிண்டர், ஹிண்ஞ் போன்ற டேட்டிங் ஆப்களில் பிடித்தவர்களை ஸ்வைப் செய்து தேர்வு செய்வதுதான் வழக்கம். ஆனால் பர்ஸ்ட் டேட் இதற்கு முற்றிலும் மாறான அணுகுமுறையை சோதித்து வருகிறது. அதில் யூசர்களுக்கு ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டுமே பரிந்துரைக்கப்படும். முதலில் யூசர்கள் தங்களது விருப்பங்கள், வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள் குறித்து விரிவான சர்வேயை நிரப்ப வேண்டும். இந்த தகவல்களை வைத்து அந்த தளமே பொருத்தமான நபரை தேர்வு செய்யும். அப்போதே இருவருக்கும் எந்தளவுக்கு மேட்ச் இருக்கிறது என்பதும் காட்டப்படும். இப்படி பரிந்துரைக்கப்பட்ட நபருடன் டேட் போகலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், உரையாடலை எப்படி தொடங்கலாம் என்பதற்கான சில பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன. டேட்டிங் செயலிகளில் இருக்கும் முக்கிய பிரச்சினையே அடையாள குளறுபடிகள் தான். போலியாக கணக்கை ஓபன் செய்து ஏமாற்ற பலரும் இருக்கிறார்கள். அதை தடுக்க ஃபர்ஸ்ட் டேட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. சிங்கப்பூரின் தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பான 'Singpass' இருந்தால் மட்டுமே இதில் இணைய முடியும். முன்பே குறிப்பிட்டது போல மக்கள் தொகை சரிவு தான் இதற்கு முக்கிய காரணம். சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2025ம் ஆண்டில் அந்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 0.87 ஆக குறைந்தது. இது 2024ல் 0.97ஆக இருந்தது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 29,864 குழந்தைகள் பிறந்த நிலையில், இது முந்தைய ஆண்டைவிட 11.4 சதவீதம் குறைவாகும். அங்கு திருமணங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2025ல் சிங்கப்பூரில் 24,688 திருமணங்கள் பதிவாகின. இது முந்தைய ஆண்டைவிட 6.2 சதவீதம் குறைவு. மேலும், முதல் திருமணத்திற்கான சராசரி வயதும் அதிகரித்துள்ளது. 2025ல் முதல் திருமணம் செய்யும் ஆண்களின் சராசரி வயது 31.1 ஆகவும், பெண்களின் சராசரி வயது 29.6 ஆகவும் இருந்தது. சிங்கப்பூரின் மக்கள் தொகை வயதான சமூகமாக மாறி வரும் நிலையில், தனியாக வசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த டேட்டிங் செயலியை சிங்கப்பூர் அரசு உருவாக்கியுள்ளது.டேட்டிங் செயலி
ஒரே ஒரு மேட்ச்
கடுமையான சட்டம்
காரணம்
முயற்சி