சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொது இடங்களில் செல்போனில் சத்தமாக வீடியோ பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்ற செயல்களால் சக பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். பேருந்துகளில் அருகில் உட்கார்ந்து கொண்டு செல்போனை கேட்க வேண்டிய நிலை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு சில மிக கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது.
பொதுவாக சிங்கப்பூர் என்றாலே நமக்கு அங்கிருக்கும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் அங்கு மக்களிடையே இருக்கும் உச்சபட்ச ஒழுக்கமும் தான் நினைவுக்கு வரும். அங்கு மக்கள் ஒழுக்கத்தோடு இருக்க அங்கிருக்கும் அபராதங்களும் மிக கடுமையான சட்டங்களும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கிடையே பொது போக்குவரத்து தொடர்பாக சிங்கப்பூர் அரசு சில புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி சிங்கப்பூரில் இனி பேருந்துகளில் சத்தமாக ஆடியோ அல்லது வீடியோ பார்ப்பது, இருக்கைகளில் கால்களை வைப்பது, உணவு சாப்பிடுவது, பானங்களை அருந்துவது அல்லது குப்பைகளை வீசுவது போன்ற செயல்களுக்கு 500 சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.37,471 ஆகும். பொது போக்குவரத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சாதாரண ஒழுங்கீன செயல்களுக்கு ரூ.37 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், பயணிகளுக்கு ஆபத்து அல்லது கடுமையான இடையூறு ஏற்படுத்தும் செயல்களுக்கு அபராதம் பல மடங்கு அதிகரிக்கும். பேருந்து நிலையங்களில் மற்ற பயணிகளுக்கு தடையாக இருப்பது அல்லது பேருந்து, பஸ் ஸ்டாப்பை அசுத்தப்படுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு 5,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை, அதாவது சுமார் ரூ.3.74 லட்சம் அபராதம் விதிக்க முடியும். பயணிகளை கண்காணித்து இந்த அபராதங்களை விதிக்க பேருந்து நிலைய ஊழியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பேருந்து நிலைய ஊழியர்கள் உள்ளிட்டோர் விதிமீறலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு நோட்டீஸ் வழங்க முடியும். சிங்கப்பூரின் ரயில் சேவையான MRTயில் இதுபோன்ற விதிகள் ஏற்கனவே அமலில் உள்ளன. குறிப்பாக ரயிலில் உணவு சாப்பிடுவது உள்ளிட்ட சில செயல்களுக்கு நீண்ட காலமாக கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. ஆனால் பேருந்துகளில் இதுவரை பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விதிகளே அமலில் இருந்தன. விதிகளை மீறும் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் அதிகாரம் ஓட்டுநர்களுக்கு இருந்தது. இருப்பினும், இந்த விதிமீறல்கள் குறையவில்லை. மாறாக அதிகரித்தே வந்தது. அதை கருத்தில் கொண்டே சிங்கப்பூர் அரசு இந்த விதிகளை கொண்டு வந்துள்ளது. பொது போக்குவரத்தை அமைதியானதாகவும், சவுகரியமானதாகவும் மாற்றும் முயற்சியில் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போலந்தின் கிராகோவ் நகரிலும் இதேபோன்ற விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு விதிகளை மீறினால் 200 ஸ்லாட்டி வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பிரான்சிலும் ரயில் நிலையத்தில் ஸ்பீக்கர் மூலம் சத்தமாக செல்போனில் பேசிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல உலகின் பல்வேறு நாடுகளும் பொது போக்குவரத்தில் சவுகரியமாக மக்கள் பயணிக்க அபராதங்களை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர்
அபராதம்
ரயில்கள்
பொது போக்குவரத்து