முதியோர் உதவித்தொகையை கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள்.. அலையவிட்டு தாமதிக்கும் தமிழக அரசு

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 4ம் தேதி உதவித்தொகை வரவு வைக்கப்படும் நிலையில் இன்று தேதி 22 ஆகியும் கிடைக்காததால் முதியவர்கள் தவித்து வரும் நிலையில் தமிழக அரசு முதியோர் உதவித்தொகையை விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தில் முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேலானவர்களுக்க உதவிடும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள முதியவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    Advertisement

    ஒவ்வொரு மாதமும் முதியவர்களின் வங்கி கணக்குகளுக்கு மாதத்தின் 4ம் தேதி அல்லது அதிகபட்சம் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் இந்த மாதம் முதியோர் உதவித்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

    இன்று செப்டம்பர் 22ம் தேதி ஆகியும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் முதியவர்களின் வங்கி கணக்கிற்கு முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்படவில்லை.

    இதுபற்றி வங்கி சென்று கேட்டால் தாலுகா அலுவலகத்தில் விசாரியுங்கள், தபால் நிலையத்தில் புதிய அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்யுங்கள் என்று கூறி அலைக்கழித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனையிில் கவனம் செலுத்தி முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    Advertisement

    முத்துமலை

    இதுபற்றி மாம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துமலை கூறுகையில், ''நான் கடந்த ஓராண்டாக முதியோர் உதவித்தொகை வாங்கி வருகிறேன். இந்த மாதம் எனக்கு வர வேண்டிய உதவித்தொகை கிடைக்கவில்லை. வங்கியின் வழியாக தான் எனக்கு உதவித்தொகை வந்தது.

    வங்கியில் கேட்டால் தாலுகா ஆபிஸ் போக சொல்கிறார்கள். தாலுகா ஆபிஸ் போனால் தபால் நிலையத்தில் ஒரு அக்கவுண்ட் திறந்தால் தான் வரும் என்று சொல்லி அலைய வைக்கிறார்கள்'' என்று நொந்து கொண்டார்.

    ஞானம்மா

    திருமங்கலம் ஞானம்மா கூறுகையில், ''எங்களுக்கு வந்த உதவித்தொகை நின்றுவிட்டது. ஒரு மருந்து கூட வாங்கி தர சொல்லுங்க.

    Advertisement

    குடிச்சிட்டு செத்துப்போறோம். பல ஆண்டுகளாக வந்த இந்த பணம் இப்போது நின்றுவிட்டது. நாங்கள் இதை நம்பித்தான் இருக்கிறோம்'' என்றார்.

    பழனியம்மாள்

    திருமங்கலம் பழனியம்மாள், ''எங்களுக்கு இந்த மாதம் உதவித்தொகை வரவில்லை. எங்களுக்கு உடல்நல பிரச்சனை எல்லாம் இருக்கு.

    இந்தபணத்தை நம்பித்தான் இருக்கிறோம். இப்போது வரவில்லை என்ன செய்வது என தெரியவில்லை'' என்று புலம்பினார்.

    முருகய்யா

    மானாமதுரையை சேர்ந்த முருகய்யா, ''உங்களுக்கு என்னதான்பா பிரச்சனை. உரிமைத்தொகை கொடுக்க முடியுமா? முடியாதா? அரசிடம் பணம் இருக்கு? இல்லாவிட்டால் அரசு திவால் ஆகிவிட்டது? இந்த 2 பேச்சு தான் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இதை கொண்டு வா. அதை கொண்டு வா. என்று ஏழைகளை அலைக்கழிக்க கூடாது.

    Advertisement

    பணம் கிடைக்காமல் ஏழைகள் 10 நாள் இப்படி அலைவதால் அரிசி வாங்க முடியாமல், டீ, காபி குடிக்க முடியாமல், வெற்றிலை - பாக்கு வாங்க முடியாமல் முதியவர்கள் தவிக்கிறார்கள். இப்போது புருஷன் பெயர் என்ன? ஆதார் அட்டையை சேருங்கள் என்று சொல்கிறார்கள். விஏஓ ஆபிஸ் போ, தாலுகா ஆபிஸ் போ, வங்கிக்கு போ என்று அலைய வைப்பது தான் உங்கள் வேலையா'' என்று தமிழக அரசை கடுமையாக சாடினார்.

    English Summary

    In Sivaganga district, the disbursement of old-age pensions into bank accounts is being delayed. Although the pension is usually credited on the 4th of every month, it has not yet been received even by the 22nd, leaving the elderly in distress; they have urged the Tamil Nadu government to take immediate steps to release the payments.