முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

  • சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.

    Advertisement

    இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவராகவும் இருந்தவர். சட்டப்படிப்பை படித்த இவர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

    Advertisement

    1999ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்டு வென்றவர். 2004 ஆம் ஆண்டு 2010ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

    இவரது மறைவு குறித்து மாணிக்கம் தாகூர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

    தமது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரஸ் இணைந்து , காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் .

    Advertisement

    பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களது திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை (18.09.2026) சிவகங்கை மாவட்டம், ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் 3 மணி அளவில் நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அது போல் விசிக தலைவர் திருமாவளவன் தனது இரங்கலில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய ஒன்றிய இணை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இன்று சிவகங்கையில் காலமானார் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.
    அவரது மறைவு தமிழாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்!

    அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    அண்ணன் சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former Union Minister and Congress senior leader Sudharsana Nachiyappan died of cardiac arrest at his house in Sivagangai. He was served as minister under PM Manmohan Singh cabinet.