மானாமதுரையில் ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக் கொலை.. தீபாவளி நாளில் தமிழகத்தில் மேலும் 7 கொலைகள்

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தீபாவளி நள்ளிரவில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்த 23 வயது விக்னேஷை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. அவருடன் இருந்த நண்பரும் படுகாயமடைந்துள்ளார்...!!

    Advertisement

    மானாமதுரை அருகே வேலூர் முருகபஞ்சன் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23). இவர் ஏற்கனவே நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    Advertisement

    இந்த நிலையில், தீபாவளி நாளான நேற்று நள்ளிரவு விக்னேஷ் தனது நண்பர் முனீஸ்வரனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    நண்பருக்கு தீவிர சிகிச்சை

    இந்தத் தாக்குதலில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த முனீஸ்வரனும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முனீஸ்வரனை மீட்டு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இதனிடையே, உயிரிழந்த விக்னேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மானாமதுரையில் பழிக்கு பழியா?

    ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விக்னேஷ் 3-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்தச் சூழலில் விக்னேஷ் தற்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதால், இந்தச் சம்பவம் பழிக்குப் பழியாக நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்னேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை மானாமதுரை சிப்காட் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.,.. மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஒரே நாளில் 8 கொலையா?

    தீபாவளி பண்டிகை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன... மானாமதுரை அருகே ஜாமீனில் வெளியே வந்த விக்னேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சமயபுரத்தில் 17 வயது சிறுவர்கள் ராகுல், விஷால் ஆகிய 2 பேருமே வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். திருச்சி புறத்தாக்குடியில் ஐடி ஊழியர் கிறிஸ்டோபர் கொல்லப்பட்டார்.

    கடலூர் பெரிய கட்டுப்பாளையத்தில் ரௌடி பிரிதிவிராஜ் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே ரவுடி நவீன் படுகொலை செய்யப்பட்டார்.

    என்ன நடக்கிறது தமிழகத்தில்?

    தேனியில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்தே கொல்லப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் சென்றான்பாளையம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் மேகலா குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    Advertisement

    ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 8 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகளையும் இந்த சம்பவங்கள் எழுப்பியுள்ளன...!!

    Topics: #crime #diwali

    English Summary

    Manamadurai Rowdy Vignesh Murder.. 7 More People Killed Across Tamil Nadu on Diwali