சிவகங்கை: தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. 3 மாதங்களில் ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. மதுவிலக்கை நோக்கி பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆன்லைனில் மது விற்பனை என்கிற முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடையில் குடித்து விட்டு விபத்தில் சிக்குவதை விட ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் மது குடிப்பது நல்லது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என்பது காலம் காலமாக உள்ள தத்துவம். அதை திமுகவினர் கண்டறிந்தது இல்லை. இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். தொகுதி மறுவரையறை எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்தனர். நான் என்னுடைய கருத்தை கூறி வந்தேன். அழைப்பு கொடுத்தும் வராதவர்களை ஏன் வரவில்லை என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
அனைவரும் கலந்தாலோசிக்கும் நல்ல முயற்சியாக அழைத்தனர். இதனுடன் சீரியஸ்னஸ் எல்லாருக்கும் புரிவதில்லை. தொகுதி மறுவரையறை என்பது தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து இதைத் தடுக்க வேண்டும். தொகுதி மறுவரையறை பற்றி முதல்வருக்கு எதுவுமே தெரியாது என்று அன்புமணி கூறுகிறார். அப்படியென்றால் அன்புமணி நேரடியாக வந்து விளக்கியிருக்கலாமே. அவருக்கு எல்லாம் தெரியும் தானே. அழைப்பை வைத்து அவர் வந்து சொல்லியிருக்கலாமே. இந்த காலத்தில் ஆன்லைனில் மது வழங்குவது தவறில்லை. அவன் அவன் கடையில் சென்று மதுகுடித்து வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குகிறார்கள். அதற்கு பதிலாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிலேயே குடிப்பது பெட்டர். எத்தனாலை பெட்ரோலில் கலப்பதால் நிறைய பிரச்சனைகள் உள்ளன. வண்டி இன்ஜின் பாதிக்கப்படுகிறது. இது வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தெரியவில்லை. துறை அமைச்சருக்கே அதில் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். இ 20 பெட்ரோலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கஸ்டடியில் யார் இறந்தாலும் அதுகுறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிசிஐடி விசாரணை நடத்தி ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தேவையை பொறுத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். எடுத்தவுடன் சிபிஐ சென்றால் தமிழக காவல்துறைக்கு வேலை இல்லாமல் போய்விடும். காவிரியில் தண்ணீர் பங்கிடுவதற்கு ஒரு அளவுகோல் உள்ளது. மழை பெய்தால் எப்படி கொடுக்க வேண்டும், மழை பெய்யவில்லை என்றால் எப்படி கொடுக்க வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் விதி உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும். கர்நாடகா அரசு அதை செய்யவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். தமிழக அரசும் செல்லும். ஏற்கனவே ஒரு விதி இருக்கும்போது அதை செயல்படுத்தினால் போதும். தொகுதி மறுவரையறை பிரச்சனையை உடனடியாக கொண்டு வருகிறார்கள். இதை உடனடியாக கவனிக்க வேண்டும். காவிரி பிரச்சனை 40 வருடங்களாக உள்ளது. அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பது கடினம்" என்றார்.அனைத்து கட்சி கூட்டம்
ஆன்லைன் மது விற்பனை