பூலாம்பட்டியில் 500 கிலோ மட்டனில் கறிவிருந்து.. சிவகங்கையில் திரண்ட 5000 பேர்.. அங்கே தான் விஷயமே

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாம்பட்டி கிராமம் என்றாலே, மத நல்லிணக்கத்துக்கு பெயர் போனது என்றே சொல்லலாம். இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று மதங்கள் வேறாக இருந்தாலும், ஊர் என்று வந்துவிட்டால் எல்லோரும் ஒன்றுதான்... இதை தலைமுறை தலைமுறையாக நிரூபித்து வருகிறது ஒரு பாரம்பரிய கறி விருந்து... அந்த விருந்தை பற்றிதான் பார்க்க போகிறோம்..!!

    Advertisement

    பூலாம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மத நல்லிணக்க கறி விருந்து விழா நடைபெறும்.. இந்த பாரம்பரியம் இன்று நேற்றல்ல, 100 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

    Advertisement

    சிவகங்கை கறிவிருந்து

    இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் தங்கள் நிலங்களில் விளையும் விளைச்சலில் ஒரு பகுதியை இந்த விருந்துக்காகவே ஒதுக்கி வைக்கிறார்கள்...அதன்பிறகு பெருநாள் தொழுகை நடைபெறும் திடல் பள்ளிவாசலில் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாப்பாடு செய்வார்கள். இதில் ஒரு விஷயம் ஹைலைட் என்னவென்றால், யார் எந்த மதம் என்றெல்லாம் பார்க்காமல், எப்படி சேர்ந்து சமைக்கிறார்களோ, அதுபோலவே, எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்...

    500 கிலோ மட்டன்

    ஆனால் இந்த வருடம் பருவமழை சரியாக பெய்யவில்லை.. விவசாயமும் பாதிக்கப்பட்டது.. ஆனாலும், கறிவிருந்து நடத்தியாக வேண்டும், பாரம்பரியத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தார்கள். இதற்காக ஊர் வரி வசூலித்தனர்.. அந்த பணத்தில் கடைகளில் சுமார் 750 கிலோ அரிசி வாங்கினார்கள்.. அத்துடன் 500 கிலோ ஆட்டுக்கறியும் வாங்கி, பிரம்மாண்டமான அசைவ விருந்தை தயார் செய்தனர்.

    Advertisement

    நேற்று மதியம் தொடங்கிய விருந்து, சாயடங்காலம் நேரம் வரை நீண்டது. பூலாம்பட்டி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து இந்த விருந்தில் கலந்து கொண்டனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட காட்சி பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

    பூலாம்பட்டியில் நெகிழ்ச்சி

    இதில் இன்னொரு நெகிழ்ச்சியான விஷயமும் இருக்கிறது. இந்த விழாவுக்காக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சர்க்கரை, பேரிச்சம்பழம், மல்லிகைப்பூ, ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அந்த பொருட்களை வைத்து துவா ஓதி வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு அவை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    Advertisement

    இந்த நல்லிணக்க விருந்து இத்துடன் முடிந்துவிடுவதில்லை. முதல் நாள் பள்ளிவாசலில் விருந்து என்றால், அதற்குப் பிறகு கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலிலும் அனைத்து மதத்தினரும் சேர்ந்து வழிபாடுகளில் பங்கேற்பது வழக்கம். சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

    மதங்கள் வேறாக இருந்தாலும் மனங்கள் ஒன்றாக இருந்தால் ஒரு கிராமம் எப்படி இருக்கும் என்பதற்கு பூலாம்பட்டி ஒரு அழகான எடுத்துக்காட்டு.... தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த சமத்துவ விருந்தில் கலந்து கொண்டவர்கள், பூலாம்பட்டி மக்களின் ஒற்றுமையை பாராட்டியபடியே சென்றார்கள்.. இப்போது இந்த விழாவின் போட்டோக்கள், வீடியோக்களை பார்த்து நெட்டிசன்களும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்...!!

    English Summary

    Poo­lambatti Curry Feast: 500 Kg Mutton, 5,000 People Gather in Sivaganga.. Here’s the Truth Story