4 கோடிக்கு 2 லட்சம்... மானாமதுரை நகராட்சி ஆபிஸில் பொறியில் சிக்கிய சிவகங்கை பொறியாளர்

  • சென்னை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் 3 பகுதிகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரரிடம் சாலைப்பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி மானாமதுரை நகராட்சி பொறியாளர் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறியாளரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கார் டிரைவரையும் கைது செய்தனர்.

    Advertisement

    அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதானால், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் காலம் வரை பாதி சம்பளம் தான் வரும். அதேபோல் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், வேலை போவது உறுதி.. சிறைக்கு செல்வதும் உறுதி. அதேபோல் பணிகொடை, பென்சன் உள்ளிட்ட அரசின் எந்த பணமும் குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு கிடைக்காது. அவரது வாழ்க்கையில் பெரிய கரும் புள்ளியாக இந்த லஞ்ச வழக்குகள் இருக்கும்.இப்படி இருந்தாலும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் இருக்காத்தான் செய்கிறார்கள்.

    Advertisement

    சிவகாங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் 3 பகுதிகளில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கவும், அடுத்தக்கட்ட நடைமுறைகளுக்கும் நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் (வயது 51) என்பவர் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சத்தை ஒப்பந்ததாரரிடம் கொடுத்து முதல் தவணைத்தொகையாக இதனை நகராட்சி என்ஜினீயரிடம் கொடுக்குமாறு கூறினார்.

    Advertisement

    அதன்பேரில் ஒப்பந்ததாரரும், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் பொறியாளரின் அறையில் வைத்து முதல் தவணையாக ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொள்ளுமாறு பட்டுராஜனிடம் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பட்டுராஜனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். போலீசாரின் விசாரணையில், பட்டுராஜன் வாங்கிய லஞ்சப்பணத்தை 36 வயதாகும் தனது கார் டிரைவர் சேதுபதி என்பவரிடம் கொடுத்து காரில் மறைத்து வைக்குமாறு கூறியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்த டிரைவர் சேதுபதியையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மானாமதுரை நகராட்சி அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, ரூ.4 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தப்பணிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக கோப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். விசாரணைக்கு பின்னர் மேல் நடவடிக்கை எடுக்க உள்ளார்கள்.

    English Summary

    Road-laying work using bitumen is currently underway in three areas of the Manamadurai Municipality in Sivaganga district, at an estimated cost of ₹4 crore. A complaint was raised against the Manamadurai Municipal Engineer for allegedly accepting a bribe of ₹2 lakh from the contractor executing the project in exchange for approving the road work. Anti-corruption police apprehended the engineer red-handed and arrested him in connection with this incident.