ஆன்லைன் லிஸ்ட்டில் கரும்பு அவுட்.. சிவகங்கை கூட்டுறவு வங்கி பயிர்க்கடனில் விவசாயிகள் ஷாக்! என்னாச்சு

  • சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக கரும்பு விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தற்போது கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் கரும்பு பயிருக்கு கடன் வழங்க ஒட்டுமொத்தமாக மறுத்து வருவதாகவும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? அதிகாரிகள் இச்சிக்கல் குறித்து தந்துள்ள விளக்கம் என்ன தெரியுமா?

    Advertisement

    சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களின் நிதி சுழற்சியை அதிகரிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் பயிர் கடன்கள் மற்றும் நகை அடமானக் கடன்கள் தடையின்றி வழங்கப்பட்டு வந்தன.

    Advertisement

    சிவகங்கை கூட்டுறவு பயிர்க்கடன்

    கடந்த ஆண்டு வரை இருந்த நடைமுறை விவசாயிகளுக்கு மிகவும் எளிதானதாக இருந்தது. கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு செய்து வழங்கும் அடங்கல் சான்றிதழில், எத்தனை ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது என்ற விவரம் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்குப் பயிர் கடன் தொகையை உடனுக்குடன் விடுவித்து வந்தன. இதனால் விவசாயப் பணிகளும் எந்தவிதமான தொய்வும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வந்தன.

    சிவகங்கை விவசாயிகள் அப்செட்

    ஆனால் இப்போது கூட்டுறவுத் துறை ஒரு புதிய ஆன்லைன் நடைமுறையைக் கொண்டு வந்து, விவசாயிகளுக்கு பயங்கர அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனிமேல் வரும் காலங்களில் விவசாயிகள் பயிர் கடனுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பழைய கரும்புப் பயிர் கட்டைகள்

    இதற்காக விவசாயிகளின் பெயர், முகவரி, போட்டோ, நிலபரப்பு, பட்டா நம்பர், அவர்கள் பயிரிடும் பயிர் விவரங்களை ஆன்லைனில் அப்லோடு செய்யும் இ-கேஒய்சி (e-KYC) முறை முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தொழில்நுட்ப பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான், கடன்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும் என்று வங்கிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனவாம்.

    இப்படியொரு உத்தரவுக்கு பிறகுதான், பெரிய சிக்கல் ஒன்றும் முளைத்துள்ளது.. அதாவது புதிய கரும்பு நடவு செய்வதற்கும், ஏற்கனவே அறுவடை முடிந்து நிலத்தில் உள்ள பழைய கரும்புப் பயிர் கட்டைகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும் கடன் கேட்டு விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, டெக்னிக்கல் கோளாறு காரணமாக அவர்களுடைய பட்டா நம்பரை சரிபார்த்தால், அங்கு கரும்பு பயிரிடப்பட்டுள்ள விவரமே ஸ்கிரீனில் காட்டுவதில்லையாம்.. அதற்கு பதிலாக, அந்த விளைநிலம் வெறும் காலியிடமாக இருப்பதாகவே ஆன்லைன் லிஸ்ட் காண்பிக்கிறதாம்..

    Advertisement

    கரும்பு பயிருக்கான ஆப்ஷன் மிஸ்ஸிங்

    ஆன்லைன் மென்பொருளில் கரும்பு பயிருக்கான ஆப்ஷன் விடுபட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று விவசாயிகள் புலம்புகிறார்கள். இதனாலேயே தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் கரும்புப் பயிருக்குக் கடன் வழங்க ஒட்டுமொத்தமாக மறுத்து வருவதாகவும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

    இதனால் உச்சக்கட்ட விரக்தியடைந்த விவசாயிகள், பழைய நடைமுறைப்படி விஏஓவிடம் நேரில் அடங்கல் சான்றிதழ் வாங்கி வந்து கொடுத்தாலும், "எல்லாவற்றையும் ஆன்லைனில் மட்டுமே பதிவேற்ற வேண்டும், எங்களுக்கு வேறு வழியில்லை" என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம்.

    அதிகாரிகள் தரும் விளக்கம் என்ன

    இந்த சிக்கல் குறித்து சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "விவசாயிகளின் முழு விவரங்களையும், பயிர் விவரங்களையும் ஆன்லைனில் துல்லியமாக பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் இப்போது கூட்டுறவு வங்கியில் தீவிரமாக நடந்து வருகின்றன.

    Advertisement

    இந்த பயிற்சி வகுப்புகள் முழுமையாக நிறைவடைந்து, ஆன்லைன் மென்பொருளில் பயிர் விவரங்கள் சரியாகப் புதுப்பிக்கப்பட்ட பிறகுதான், கரும்பு விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலமாகக் கடன் வழங்க முடியும்" என்று விளக்கம் தந்துள்ளார்கள்.

    அரசின் இந்த திடீர் ஆன்லைன் குளறுபடி காரணமாக, விவசாய பணிகளை அடுத்து தொடங்க முடியாமல் சிவகங்கை மாவட்ட கரும்பு விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போயிருக்கிறார்களாம்...!!!

    English Summary

    Sugarcane Missing from Online List! Farmers Shocked by Crop Loan Issue at Sivagangai Cooperative Bank