சிவகாசியில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

  • சிவகாசி: சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது பலத்த சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறிய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம்பிரகாஷ் என்பவர் உள்ள ஒரு இடத்தில் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கு ஐந்து தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கியது.

    இதில் அந்த பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது. இதில் சம்பவ இடத்திலேயே உரிமையாளர் ராம் பிரகாஷ்(32) இன்னாசி முத்து(42) ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதில் ராமச்சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் ஐயப்ப ராஜா(38) பாண்டித்துரை (35) ஆகிய இரண்டு பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சில மணி நேரங்களுக்கு பின்பு அவரது உடல்கள் சிதறிய நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. மேலும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது எப்படி இது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்யவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபோன்ற சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகளால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    Advertisement

    அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு இது போன்ற சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பது தெரியாமல் எப்படி இருந்தது என்றும் பட்டாசு தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    English Summary

    The death toll in Sivakasi firecrackers raises to 5 with loud sound and owner himself died in incident.