விருதுநகர்: தீபாவளி பண்டிகையை இன்று மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். சிவகாசியில் இந்த ஆண்டு 7,000 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடைபெற்றதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை, தடை செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், அதிகாரிகள் ஆய்வு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளால் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டாசு உற்பத்தி சற்று முடங்கியது.
மேலும், போர் காரணமாக உயர்ந்த மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களாலும், நடப்பாண்டு பட்டாசு உற்பத்தி மந்தமானது. எனினும், தீபாவளி நெருங்க நெருங்க பட்டாசு தயாரிப்பு பணிகள் வேகமெடுத்தன. சரவெடி வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்தது. நடப்பாண்டு 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த ஆண்டு சிவகாசியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 7 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பட்டாசு உற்பத்தியை அதிகரித்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனையை பெருக்க திட்டமிட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு சிவகாசியில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடைபெற்றதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருமணம், கோயில் விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் தொடங்கி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. நாட்டின் பட்டாசு தேவையில் 90 சதவீதம் சிவகாசியில் இருந்து சப்ளை ஆகிறது.