உலகக்கோப்பை அரங்கில் தடை செய்யப்பட்ட பிராண்டுகள்.. கடைசியில் FIFAயே மண்டியிட வைத்த பிசினஸ் மேஜிக்!

  • நியூயார்க்: உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டு மைதானத்தின் விளிம்புகளில் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள் ஒளிர்கின்றன. உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் (Official Sponsors) தங்களின் லோகோக்கள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பட வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால், மைதானத்தின் இன்னொரு பக்கத்தில், ஒரு விசித்திரமான யுத்தம் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    அங்கே, உலகப் புகழ்பெற்ற 'லெவிஸ்' (Levi's) மைதானத்தின் லோகோ வெள்ளை நிற தார்ப்பாயால் மூடப்படுகிறது. பிரஸ் பாக்ஸில் இருக்கும் 'ஹெய்ன்ஸ்' (Heinz) கெட்சப் பாட்டில்களின் மீது கறுப்பு டேப் ஒட்டப்படுகிறது. ஜெர்மனியின் நட்சத்திர கால்பந்து வீரர் ஜமால் முசியாலா அணிந்திருக்கும் 'பீட்ஸ்' (Beats) ஹெட்போனின் லோகோ மறைக்கப்படுகிறது. பிஃபா (FIFA) அமைப்பு இவர்களைத் தடை செய்திருக்கிறது, மறைத்திருக்கிறது, முடக்கியிருக்கிறது. காரணம் இவர்கள் யாரும் இந்த தொடரின் ஸ்பான்சர் இல்லை.. வெறுமனே அந்த கிரவுண்டின் நிர்வாகிகள்.. உதாரணமாக levis நிர்வகிக்கும் மைதானத்தில் உலகக்கோப்பை ஆட்டம் நடந்த போது.. அவர்கள் தொடரின் ஸ்பான்சர் இல்லை என்பதால் மைதானத்தின் மேலே இருக்கும் levis மறைக்கப்பட்டது.. இதே கதைதான் மற்ற நிறுவனங்களுக்கும்.

    Advertisement

    ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் உலகமே யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது தெரியுமா? அதிகாரப்பூர்வமாக கோடிகளை கொட்டியவர்களையல்ல; யாரையெல்லாம் பிஃபா முடக்க நினைத்ததோ, அவர்களைப் பற்றித்தான்!

    பிசினஸ் உலகிலும் சரி, நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி... நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை முடக்க நினைக்கும் போது, நாம் எப்படி விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பதற்கான ஆகச்சிறந்த மாஸ்டர்கிளாஸ் பாடம் இது.

    தி ஸ்ட்ரைசண்ட் எஃபெக்ட் (The Streisand Effect): மறைக்க நினைத்தால் அது மலரும்!

    பிரபல பாடகி பார்ப்ரா ஸ்ட்ரைசண்ட் (Barbra Streisand) என்பவரின் பெயரால் உருவானதுதான் இந்த 'ஸ்ட்ரைசண்ட் எஃபெக்ட்' என்ற பிசினஸ் மற்றும் உளவியல் தத்துவம். இணையதளத்தில் இருந்த தனது வீட்டின் புகைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது என்று அவர் சட்டப்படி தடை விதிக்க முயன்றார். விளைவு? அதுவரை அந்தப் புகைப்படத்தை வெறும் ஆறு பேர் மட்டுமே பார்த்திருந்த நிலை மாறி, தடைச் செய்தி வெளியானவுடன் லட்சக்கணக்கான மக்கள் அதைத் தேடித்தேடிப் பார்த்தார்கள்.

    Advertisement

    இன்று உலகக்கோப்பை மைதானங்களிலும் அதுதான் நடக்கிறது. பிஃபா இந்த பிராண்டுகளைப் புறக்கணிப்பதற்குக் காரணம் துவேஷம் அல்ல, அது அவர்களின் பிசினஸ் பாதுகாப்பு (Protection). உலகக்கோப்பையோடு தங்கள் பெயரை இணைக்க கோடிக்கணக்கான பவுண்டுகளை ஸ்பான்சர்கள் வழங்கியிருக்கிறார்கள். எனவே, காசு தராமல் விளம்பரம் தேடும் 'அம்புஷ் மார்க்கெட்டிங்' (Ambush Marketing) உத்திகளை பிஃபா கட்டுப்படுத்துகிறது. வீரர்களின் ஆடைகள், மைதானப் பெயர்கள் என அனைத்தையும் கண்காணிக்கிறது.

    ஆனால், மனித கவனம் என்பது தண்ணீரைப் போன்றது. நீங்கள் எங்கே அணை போடுகிறீர்களோ, அங்கே அது புதிய பாதையை உருவாக்கிக் கொண்டு பாய்ந்துவிடும். உங்களை ஒரு எல்லைக்குள் அடைக்க நினைக்கும் போதுதான், உங்கள் எல்லைகளற்ற ஆற்றல் வெளியே வரத் தொடங்குகிறது.

    Advertisement

    தடைகளை மூலதனமாக்கிய வித்தை

    கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இந்த முடக்கப்படும் பிராண்டுகள் காட்டி அசாத்திய துணிச்சல் நமக்கு பிரமிப்பூட்டும்.

    2006 உலகக்கோப்பை: நெதர்லாந்து நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழையும் போது தங்களின் கால்சட்டைகளைக் கழற்றச் சொல்லி பிஃபா அதிகாரிகள் உத்தரவிட்டனர். காரணம், அவர்கள் அணிந்திருந்த பேன்ட்டில் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரான 'பட்வைசர்' லோகோ இல்லை, மாறாக 'பவேரியா' என்ற லோகோ இருந்தது. அந்த ரசிகர் தனது அண்டர்வேரோடு அமர்ந்து மேட்ச் பார்த்த கதை உலக அளவில் தலைப்புச் செய்தியானது. பவேரியா நிறுவனம் ஒரு பைசா செலவில்லாமல் உலகப் புகழ்பெற்றது.

    Advertisement

    2014 உலகக்கோப்பை: சோனி (Sony) நிறுவனம் கோடிகளைக் கொட்டி ஸ்பான்சர்ஷிப் வாங்கியிருந்தது. பீட்ஸ் (Beats) ஹெட்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. சோனி நிறுவனம் அனைத்து வீரர்களுக்கும் இலவசமாக ஹெட்போன்களை வழங்கியது. ஆனால், நெய்மர் முதல் சுவாரஸ் வரை அனைத்து நட்சத்திர வீரர்களும் மைதானத்திற்கு வெளியே, பஸ்களில், பயிற்சிகளில் தங்களுக்குப் பிடித்த 'பீட்ஸ்' ஹெட்போன்களையே அணிந்து வந்தனர். சோனி காசு கொடுத்து வாங்கிய இடத்தை விட, பீட்ஸ் நிறுவனம் மக்களின் கவனத்தைக் கவர்ந்து ஜெயித்துக் காட்டியது.

    இந்தத் தொடரிலும் அதே கதைதான். தன் பாட்டிலில் டேப் ஒட்டப்பட்டதை அறிந்த 'ஹெய்ன்ஸ்' நிறுவனம், அதையே ஒரு 'லிமிடெட் எடிஷன்' (Limited Edition) மாடலாக மாற்றி சந்தையில் வெளியிட்டு அதிரடி காட்டியது. பீட்ஸ் நிறுவனம் முசியாலாவின் டேப் ஒட்டப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "இதன் பின்னால் இருப்பது 'b' (Beats லோகோ) தான்!" என்று இன்னும் சந்தைக்கு வராத தங்களின் புதிய மாடலுக்கான டீசராக மாற்றி மார்க்கெட்டிங் உலகையே உலுக்கியது.

    Advertisement

    லெவிஸ் நிறுவனம் ஒரு படி மேலே போய், தன் லோகோ தார்ப்பாயால் மூடப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது. அது மட்டுமே டிக் டாக்கில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இன்று லண்டன், பாரிஸ், பெர்லின், பிரேசில் என உலகெங்கும் உள்ள தங்களின் அவுட்லெட்களில் அதே தார்ப்பாய் மூடிய லோகோவை தங்களின் அதிகாரப்பூர்வ விளம்பரமாக மாற்றி மாஸ் காட்டியுள்ளது லெவிஸ்.

    உங்களை நீங்களே சந்தேகப்படுகிறீர்களா? இதை படியுங்கள்!

    இந்த பிசினஸ் கதையின் ஆழத்தில் நமக்கான ஒரு மிகப்பெரிய வாழ்வியல் பாடம் ஒளிந்திருக்கிறது. இன்று உங்களில் எத்தனை பேர், "எனக்கு இந்தத் தகுதி இல்லை", "என்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள்", "என் திறமைகளை யாரும் அங்கீகரிக்க மாட்டேங்குறார்கள்" என்று உங்களை நீங்களே சந்தேகப்பட்டுக் கொண்டு (Self-doubt) முடங்கிக் கிடக்கிறீர்கள்?

    உங்களை ஒரு வட்டத்தில் அடைக்க நினைக்கும் போது, அல்லது உங்களை ஒரு துறையில் இருந்து ஓரங்கட்ட நினைக்கும் போது, நீங்கள் அழக் கூடாது; மாறாக, உங்களின் தனித்துவத்தைக் கூர்மையாக்க வேண்டும். உலகக்கோப்பை ஸ்பான்சர்கள் கோடிகளைக் கொட்டி அந்த நிகழ்வை விலைக்கு வாங்க நினைத்தார்கள் (Own the event). ஆனால், தடை செய்யப்பட்ட பிராண்டுகளோ மக்களின் இதயங்களில் நுழைந்து உரையாடலைத் தொடங்க நினைத்தன (Join the conversation).

    வாழ்க்கையில் உங்களிடம் கோடிக்கணக்கான பணமோ, பெரிய பின்புலமோ, உங்களைத் தூக்கிவிடப் பெரிய மனிதர்களோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களைச் சுற்றி தடைகளும் விதிகளும் மட்டுமே மிஞ்சியிருக்கும் போதுதான், உங்கள் கற்பனைத் திறனும் (Creativity) தப்பிப்பிழைக்கும் உத்வேகமும் (Survival Instinct) உச்சத்தை அடைகின்றன.

    உங்களை நிராகரிக்கும் இடங்களை நோக்கி உங்களின் ஆற்றலைத் திருப்புங்கள். அவர்கள் உங்களை மறைக்க ஒட்டும் கறுப்பு டேப்களை, உங்கள் வெற்றிக்கான கிரீடமாக மாற்றுங்கள். உங்களை மூடும் தார்ப்பாய்களை, உங்கள் சாதனைப் பயணத்தின் கொடியாக ஏற்றி வையுங்கள்.

    வெற்றியின் இறுதி இலக்கு

    அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் போட்டிகள் முடிந்த பிறகும் மக்களின் நினைவுகளில் வாழலாம்; ஆனால், இந்த அம்புஷ் மார்க்கெட்டிங் பிராண்டுகள் போட்டிகள் நடக்கும் போதே வரலாற்றை மாற்றியமைக்கின்றன.

    யார் உங்களை வேண்டாம் என்று ஒதுக்குகிறார்களோ, அவர்களின் கண்முன்னே உங்களை தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாற்றிக் காட்டுவதுதான் உண்மையான பிசினஸ்; அதுதான் உண்மையான வாழ்க்கை.

    இனி உங்களை யாராவது முடக்க நினைத்தால், லெவிஸ் லோகோவின் மீது போர்த்தப்பட்ட வெள்ளை தார்ப்பாயை நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை மறைப்பதற்காகப் போடப்பட்ட மூடி அல்ல; நீங்கள் உலக அரங்கில் விஸ்வரூபம் எடுக்கப் போகிறீர்கள் என்பதை அறிவிக்கும் திரைச்சீலை! உங்களை நீங்களே சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். தடைகள் யாவும் தகர்க்கப்பட வேண்டியவை அல்ல, அவை உங்களை அடுத்த கட்டத்திற்கு கடத்திச் செல்லும் ஏணிகள்! துணிந்து நில்லுங்கள், உலகம் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறது!

    English Summary

    Banned from World Cup but winning the world: How hidden logos created a billion-dollar masterclass in resilience