3 ஓவரில் 3 விக்கெட், 34 பந்துகளில் 66 ரன்கள்.. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ருத்ரதாண்டவம்!

  • மும்பை: மும்பை டி20 லீக் கிரிக்கெட் தொடரில், 'கிரிக்கெட் கடவுள்' சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஒரே போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். பண்ட் மற்றும் லக்னோ அணியால் ஐபிஎல் தொடரில் பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டம் அமைந்துள்ளது.

    Advertisement

    பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஆர்க்ஸ் அந்தேரி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை அர்ஜுன் டெண்டுல்கர் தனது இடதுகை வேகப்பந்து வீச்சால் நிலைகுலைய வைத்தார். தனது 3 ஓவர் ஸ்பெல்லில் ஒரு மெய்டன் ஓவர் உள்பட வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    Advertisement

    அர்ஜுனின் இந்த அபார பந்துவீச்சால் பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆர்க்ஸ் அந்தேரி அணி களம் இறங்கிய போது, கேப்டன் சிவம் துபே அர்ஜுன் டெண்டுல்கரை 3வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறக்கினார்.

    இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அர்ஜுன், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர் மழையைப் பொழிந்தார். வெறும் 25 பந்துகளிலேயே தனது அதிரடி அரைசதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அர்ஜுன் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதில் 5 அசாத்திய சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

    Advertisement

    இவருக்கு துணையாக ஆடிய இளம் வீரர் முஷீர் கான் 54 ரன்கள் எடுக்க, இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த அசாத்திய ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் ஆர்க்ஸ் அந்தேரி அணி 13.5 ஓவர்களிலேயே ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆட்டநாயகன் விருதையும் அர்ஜுன் தட்டிச் சென்றார். இவரின் இந்த 194 ஸ்ட்ரைக்-ரேட் அதிரடி, டி20 கிரிக்கெட்டில் இவருக்கான முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இதனால் அர்ஜுன் டெண்டுல்கர் விரைவில் டி20 கிரிக்கெட்டில் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Arjun Tendulkar: 3 Wickets in 3 Overs and a 34-Ball 66, Arjun Tendulkar Puts on a Sensational All-Round Show in Mumbai T20 League