ஐசிசி தரவரிசைப் பட்டியல்.. புதிய உச்சம் தொட்ட சுப்மன் கில்.. டாப் 10ல் நுழைந்த வாஷிங்டன் சுந்தர்!

  • மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    அதில் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக முன்னின்று வழிநடத்திய சுப்மன் கில், 126 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் பேட்டிங் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இந்த முன்னேற்றத்தின் மூலம், சக இந்திய வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜெய்ஸ்வால் இப்போட்டியில் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஒரு இடம் சரிந்துள்ளார். அதேபோல் இப்போட்டியில் அதிரடியாக 81 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    Advertisement

    ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக மிரட்டினார் வாஷிங்டன் சுந்தர். இந்த அபார ஆட்டத்தின் மூலம், ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அவர் முதன்முறையாக டாப் 10க்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.

    இப்போட்டியில் விளையாடாத போதிலும் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோல் 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பவுலர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 14வது இடத்தை முகமது சிராஜுடன் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டுள்ளார். பிரசித் கிருஷ்ணா 9 இடங்கள் முன்னேறி 51வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    Advertisement

    டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் பும்ரா வழக்கம் போல் முதலிடத்தில் நீடிக்கிறார். பேட்டிங்கில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதனால் அந்தத் தொடரின் பக்கம் பலரின் கவனமும் திரும்பியுள்ளது.

    English Summary

    ICC Test Rankings: Shubman Gill Overtakes Jaiswal; Washington Sundar Enters Top 10 After Historic Win Against Afghanistan