கொழும்பு: இலங்கையின் இன்று நடைபெற்ற இந்தியா A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, வெறும் ஆட்டமாக மட்டும் முடிந்துவிடாமல் பெரும் பரபரப்புடன் நிறைவடைந்தது. விறுவிறுப்பாக சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியைத் தழுவியது. ஆனால், போட்டி முடிந்த பிறகு இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் இலங்கை வீரர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இப்போது இந்தியா A, ஆப்கன் A மற்றும் இலங்கை A ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த போட்டியில் தம்புல்லாவில் நடந்த போட்டியில் இந்தியா A, இலங்கை A அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை ஏ 50 ஓவர்களில் 265 ரன்களை எடுக்கவே போட்டி டை ஆனது.
இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் இலங்கை அணி 16 ரன்களை எடுத்திருந்தது. அதில் முதல் 5 பந்துகளில் இந்திய ஏ அணி 9 ரன்களை மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை வீரர் குகதாஸ் மதுலன் வீசிய அந்த கடைசி பந்தை வைபவ் சூர்யவன்ஷியால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. மதுலன் மிகச்சரியாக ஒரு யார்க்கர் பந்தை வீச, இலங்கை அணி வெற்றியை உறுதி செய்தது. வெற்றி பெற்ற உற்சாகத்தில் மதுலன் மற்றும் இலங்கை வீரர்கள் மைதானத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டாடினர். அப்போது அங்கு ஏதோ நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வைபவ் சூர்யவன்ஷி திடீரென இலங்கை வீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுலன் கொண்டாடிய விதம் அவருக்குப் பிடிக்கவில்லையா அல்லது யாராவது அவரை வம்பிழுத்தார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, இலங்கை வீரர் ஒருவரை ஆவேசமாகத் தள்ளிவிட்டார். பதிலுக்கு அவர்களும் சூர்யவன்ஷியை தள்ளிவிட்டனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட இலங்கை அணியின் அனுபவ வீரர் நிரோஷன் டிக்வெல்லா, உடனடியாக இரு தரப்பினருக்கும் இடையே புகுந்து சமாதானம் செய்தார். ஒரு மூத்த வீரராக அவர் சூர்யவன்ஷியை அமைதிப்படுத்த முயன்றார். போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் போதும் சூர்யவன்ஷி கோபமாகவே காணப்பட்டார். இறுதியில் இந்திய அணி வீரர்கள் அவரை சமாதானப்படுத்தி பெவிலியனுக்கு அழைத்துச் சென்றனர். இந்த போட்டியில் சூர்யவன்ஷி மட்டுமல்லாமல், இந்திய கேப்டன் திலக் வர்மாவும் நடுவர்களுடன் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதலில், போதிய வெளிச்சம் இல்லை என்று நடுவர்கள் கூறியபோது, சூப்பர் ஓவர் விளையாட வெளிச்சம் போதுமானதாக இருப்பதாக அவர் வாதிட்டார். பின்னர், சூப்பர் ஓவரின் போது வீசப்பட்ட ஒரு நோ பால் முடிவு குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார். சூர்யவன்ஷி மைதானத்தில் இப்படி ஆவேசப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியின் போதும், ஆட்டமிழந்த பிறகு பாகிஸ்தான் வீரர் அலி ராசாவுடன் அவர் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்கள் இது போன்ற மோதல்களில் ஈடுபடுவது அழகல்ல என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதேநேரம் யார் மீது தவறு என்பது உறுதியாக தெரியாத நிலையில், உரிய விசாரணை தேவை என்ற குரல்களும் எழுந்துள்ளன.சூப்பர் ஓவர்
மோதல்
திலக் வர்மா
முதல்முறை இல்லை