One Last Dance சேப்பாக்கம் மண்ணில் ஃபேர்வெல் போட்டியில் களமிறங்குவாரா தோனி? சிஎஸ்கே முடிவு என்ன?

  • சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் மேட்ச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், "தல" தோனி இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது பற்றியே எழுந்துள்ளது.

    Advertisement

    நடப்பு 2026 ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல், தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தொடரின் ஆரம்பத்தில் அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தார். பின்னர் காயத்திலிருந்து குணமடைந்த போதிலும், அணியின் தற்போதைய காம்பினேஷனை கலைக்க வேண்டாம் என்ற நோக்கில் அவர் விளையாடுவதைத் தவிர்த்து வந்தார்.

    Advertisement

    கடந்த 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது பேசிய தோனி, "நான் எப்போதும் எனது கிரிக்கெட்டை திட்டமிட்டே விளையாடுகிறேன். இந்தியாவில் நான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் அமைந்தது. அதேபோல், என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னையில் தான் இருக்கும்" என்று ரசிகர்களுக்கு உறுதி அளித்திருந்தார்.

    தற்போது தோனிக்கு 44 வயதாகும் நிலையில், இந்த 2026 ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், சென்னையில் இன்று நடக்கும் போட்டியே தோனி சிஎஸ்கே ஜெர்சியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடக்கூடிய கடைசிப் போட்டியாக இருக்கக்கூடும் என்ற கருத்து வலுத்துள்ளது.

    Advertisement

    அதற்கேற்ப நேற்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். சுமார் 30 நிமிடங்கள் பேட்டிங் செய்த அவர், ஸ்பின்னர்கள் மற்றும் த்ரோ-டவுன் பந்துகளை சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். இது சென்னை ரசிகர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை தோற்றதால், புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தோனியின் அனுபவமும் ஃபினிஷிங் திறமையும் அணிக்கு தேவை என்பதால், அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

    Advertisement

    ஒருவேளை சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற தவறினால், அடுத்த சீசனில் தோனி விளையாடுவது சந்தேகம் தான். இதனால் கடைசியாக ஒருமுறை தோனி இன்று களமிறங்கி தனது ரசிகர்களுக்கு சென்னை மண்ணில் 'ஃபேர்வெல்' கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    MS Dhoni: The Ultimate Last Dance? All Eyes on MS Dhoni as CSK Faces SRH in Crucial Final Chepauk Home Game in IPL 2026