அடுத்த ‘வால்’ தயார்! இந்திய யு19 அணியில் விக்கெட் கீப்பராக நுழைந்தார் ராகுல் டிராவிட்டின் இளைய மகன்!

  • மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான 'தி வால்' ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வய் டிராவிட் இந்திய யு19 அணியில் முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய யு19 அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

    Advertisement

    பிசிசிஐ-யின் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ள இந்த 15 பேர் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில், விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக 17 வயதான அன்வய் டிராவிட் இடம்பிடித்துள்ளார். கடந்த சில காலமாகவே உள்நாட்டு இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் அன்வய் டிராவிட் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    Advertisement

    கர்நாடக யு19 அணியின் கேப்டனாகச் செயல்பட்ட அன்வய், கடந்த வினோ மன்கட் டிராபி தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக அவர் அடித்த 82 ரன்கள் மற்றும் இன்னொரு அரைசதமும் அடங்கும். ராகுல் டிராவிட் 1990களின் தொடக்கத்தில் இந்திய யு19 அணிக்காக விளையாடினார்.

    தற்போது 3 தசாப்தங்களுக்குப் பிறகு, அவரது மகனும் இந்திய யு19 அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய யு19 தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனது. தற்போது இளைய மகன் அன்வய் அதிகாரப்பூர்வமாக இந்திய அணியில் நுழைந்துள்ளார்.

    Advertisement

    இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக யஷ்வர்தன் சிங் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் துணைக் கேப்டனாக லக்சயா ராய் செயல்பட இருக்கிறார். இதில் அன்வய் டிராவிட் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அடுத்த யு19 உலகக் கோப்பைக்கான புதிய அணியைக் கட்டமைக்கும் பணியை பிசிசிஐ இந்த இலங்கைத் தொடரின் மூலம் தொடங்கியுள்ளது. டிராவிட்டின் மகன் என்பதால் எழும் கூடுதல் எதிர்பார்ப்புகளுடன் அன்வய் டிராவிட், சர்வதேச அரங்கில் எப்படிச் சோபிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

    English Summary

    Rahul Dravid: Like Father, Like Son, Rahul Dravid’s Youngest Son Anvay Picked in India U-19 Squad for Sri Lanka Tour