மும்பை: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசி சாதனை படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுரத்தனமான பேட்டிங் ஸ்டைல் மற்றும் அவரது பேட்டிங் நுணுக்கம் குறித்தும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 97 ரன்களை குவித்தார்.
பிளே ஆஃப் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அட்டாக்கிங் கேமை வெளிப்படுத்தி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வைபவ்வின் பேட்டிங் நுணுக்கங்களை சச்சின் டெண்டுல்கர் கவனித்துள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அற்புதாமாக இருந்தது. அதைவிட இன்னும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தனது கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் கொடுப்பதற்காக, அவர் தனது முன் காலை (Front foot) எவ்வளவு அழகாக நகர்த்தி விளையாடுகிறார் என்பதுதான். இந்த சுதந்திரமான அணுகுமுறைதான் அவரை அதிரடியாக விளையாட அனுமதிக்கிறது. அந்த இன்னிங்ஸை அற்புதம் என்பதை விடவும் மேலானது என்று பாராட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றிலேயே மிக அதிவேகமாக 16 பந்துகளில் அரைசதம் கடந்து, கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால சிக்சர் சாதனையை உடைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. குறிப்பாக பேட் கம்மின்ஸ் மற்றும் சாகிப் உசேன் வீசிய லெக்-சைடு பந்துகளை, சச்சின் குறிப்பிட்டது போலவே தனது முன் காலை நேர்த்தியாக நகர்த்தி மைதானத்திற்கு வெளியே வைபவ் பறக்கவிட்ட விதம் அனைவரையும் அசரடித்தது. இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 15 போட்டிகளில் 680 ரன்கள் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான 'ஆரஞ்சு கேப்' பட்டியலிலும் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 1989ல் சச்சின் டெண்டுல்கர் எப்படி 16 வயதில் இந்திய அணிக்குள் அதிரடியாக நுழைந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தாரோ, அதேபோல தற்போது 15 வயதில் ஐபிஎல் தொடரை மிரட்டி வரும் வைபவ் சூர்யவன்ஷியை 'கிரிக்கெட் கடவுளே பாராட்டியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.