பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்குப் பிறகு, நாளை நடைபெற உள்ள கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 15 வயது இளம் பேட்டிங் புயலான வைபவ் சூர்யவன்ஷிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, முதல் டி20 போட்டியில் அயர்லாந்திடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. 183 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
இதனால் இந்தத் தோல்விக்குப் பதிலடி கொடுத்து, டி20 தொடரை 1-1 என சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. எனவே, பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்வது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ரன் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, முதல் போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோர், "உலகின் தற்போதைய சிறந்த டி20 வீரரான வைபவுக்கு வாய்ப்பளிக்காததை நம்பவே முடியவில்லை" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொந்தளித்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவர் அறிமுக வீரராக (Debut) களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அவர் களமிறங்கினால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மிகக் குறைந்த வயதுடைய வீரர் என்ற வரலாற்றைப் படைப்பார். வைபவ் சூர்யவன்ஷியை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டுமென்றால், ஏற்கனவே உள்ள சீனியர் வீரர்களில் ஒருவரை வெளியேற்ற வேண்டும். முதல் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஏமாற்றமளித்தார். எனவே, நாளைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாம்சன் வெளியேறினால், விக்கெட் கீப்பிங் பொறுப்பை இஷான் கிஷன் முழுமையாகக் கவனிப்பார். முதல் போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டிய அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராகக் களமிறங்கினால், இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அந்த இடத்திலும் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படலாம். அதேபோல் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு பிரின்ஸ் யாதவ் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.