மக்கள் கேப்டன் டூ ரியல் கேப்டன்.. வீழ்ந்த இடத்திலிருந்தே எழுந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரின் ‘மாஸ்’ கம்பேக்

  • மும்பை: விளையாட்டு உலகம் எத்தனையோ மீண்டெழுதல் கதைகளைக் கண்டிருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியிருப்பது ஒரு அசாத்தியமான சம்பவம். ஒருபுறம் பிசிசிஐ ஒப்பந்தம் பறிபோனது, மறுபுறம் இந்திய டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டது எனப் பாதாளத்திற்குச் சென்றார் ஸ்ரேயாஸ்.

    Advertisement

    இன்று அதே பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலுக்குள் கம்பீரமாக நுழைந்து, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகவும் அரியணை ஏறியுள்ளார். 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் வாழ்க்கை மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக, பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    Advertisement

    தொடர்ந்து ஃபார்ம் அவுட் மற்றும் காயம் காரணமாக இந்திய டி20 சர்வதேச அணியில் இருந்தும் அவர் தனது இடத்தை முற்றிலுமாக இழந்தார். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றே பலரும் விமர்சித்தனர். ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்குத் தனது பேட்டாலும், அபாரமான கேப்டன்சி உத்திகளாலும் பதிலடி கொடுக்கத் தொடங்கினார் ஸ்ரேயாஸ்.

    கொல்கத்தா அணியை வழிநடத்தி, ஐபிஎல் 2024 கோப்பையை வென்று தனது கேப்டன்சி திறமையை உலகிற்கு நிரூபித்தார். அதே 2024-ஆம் ஆண்டில் மும்பை உள்நாட்டுக் கிரிக்கெட் அணியை வழிநடத்தி, டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் கேப்டனாக வென்று அசத்தினார்.
    அடுத்த ஆண்டே பஞ்சாப் அணியின் கேப்டனாக அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

    Advertisement

    தொடர் வெற்றிகளாலும், ஐபிஎல் தொடர்களில் காட்டிய ரன் குவிக்கும் வேட்டையாலும் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் கதவுகளைத் தட்டாமல் உடைத்து உள்ளே நுழைந்துள்ளார் ஸ்ரேயாஸ். விழுந்த இடத்திலிருந்தே உத்வேகத்துடன் எழுந்து, இன்று இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியத் தலைமையாக உருவெடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த அசாத்தியப் பயணம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயரை ரசிகர்கள் மக்கள் கேப்டன் என்று அழைத்து வந்தனர். தற்போது இந்திய அணியின் ரியல் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேறி இருக்கிறார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பெயரில் புதிய சகாப்தத்தை எழுத தொடங்கி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    English Summary

    Shreyas Iyer: From Rock Bottom to the Throne, Shreyas Iyer's Stellar Journey Back into the BCCI Setup as Captain