மும்பை: 2025ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தில் இருக்கிறார். 17 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் 6 சதங்கள், ஒரு அரைசதம் உட்பட 1086 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு பின் டிராவிஸ் ஹெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) தடுத்து நிறுத்த முடியாத ஒரு அசுர ஃபார்மில் ரன் வேட்டையாடி வருகிறார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து அசத்திய அவர், தற்போது உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு இமாலய சாதனையைப் படைத்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட் போன்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்து அரியணை ஏறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லின் பேட்டிங் சராசரியும், ரன் குவிக்கும் வேகமும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில், ஒட்டுமொத்தமாக 1,086 ரன்களைக் குவித்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். இந்த குறுகிய காலக்கட்டத்தில் மட்டும் அவர் 6 சதங்களையும், ஒரு அரைசதத்தையும் விளாசித் தனது அசாத்திய ஃபார்மை நிரூபித்துள்ளார். கேப்டன்சி பொறுப்பேற்ற பிறகு அவரது ஆட்டத்தில் முதிர்ச்சியும், ரன் குவிக்கும் வெறியும் கூடியுள்ளதை இது காட்டுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய சிறந்த பேட்ஸ்மேன்களாகக் கருதப்படும் பல முன்னணி வீரர்களைத் தாண்டி சுப்மன் கில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 1009 ரன்களும், இங்கிலாந்தின் ரன் மெஷின் ஜோ ரூட் 980 ரன்களும், இளம் புயல் ஹாரி ப்ரூக் 953 ரன்களும் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் 913 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதனால் பிரின்ஸ் சுப்மன் கில் விரைவில் கிங் சுப்மன் கில்லாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.