டி20 உலகக்கோப்பையில் இமாலய சாதனை! மிதாலி ராஜை முந்தி 'ரன் மெஷின்' ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு

  • மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர்களில், இந்திய அணியின் சார்பில் அதிக அரைசதங்களை குவித்த வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

    Advertisement

    2026ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.

    Advertisement

    இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக ரன்களை விளாசிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை விளாசினார்.

    மறுபக்கம் அதிரடியாக ஸ்மிருதி மந்தனா 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா அடிக்கும் 36வது அரைசதம் இதுவாகும். டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் பெத் மூனி 30 அரைசதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

    Advertisement

    அதேபோல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இதுவரை டி20 உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 5 அரைசதங்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். அதனை ஸ்மிருதி மந்தனா 6 அரைசதங்களுடன் முறியடித்துள்ளார்.

    சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 74 ரன்களை விளாசி அசத்தினார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா அசத்தல் அரைசதத்தை அடித்திருந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் விளாசிய இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார். இதனால் ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English Summary

    Smriti Mandhana: Smriti Mandhana Scripts History, Surpasses Elite Record for Most Half-Centuries by an Indian in T20 World Cups