ஹராரே: வாழ்க்கையில் எப்படி ஏற்ற இறக்கங்கள் இருக்குமோ, அதேபோல் கிரிக்கெட்டிலும் ஏற்ற இறக்கங்கள் வரும் என்று இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். பெஞ்சில் அமர்ந்ததை எந்தவித கவலையையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே டி20 தொடரில் என்னுடைய 100% உழைப்பை கொடுப்பேன் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி நல்ல தொடக்கம் கிடைத்தும், பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. இதனால் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பை வீணடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
கடைசி டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பெஞ்ச் செய்யப்பட்ட போது, அவர் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார். இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. 4 மாதங்களுக்கு பின் வைபவ் சூர்யவன்ஷி இதே மைதானத்தில் தான் யு19 உலகக்கோப்பையை வென்று அசத்தினார். இதனால் இந்த மைதானத்தில் ஆடிய அனுபவம் இருப்பதால், இம்முறை கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து வைபவ் சூர்யவன்ஷி பேசுகையில், ஹராரே மைதானம் மறக்க முடியாத ஒன்று.. ஏனென்றால் யு19 உலகக்கோப்பையை இந்த மைதானத்தில் தான் வென்றோம். இதே மைதானத்தில் சீனியர் அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் எனக்கு ஏற்ற இறக்கங்கள் வருகிறது. கிரிக்கெட்டில் இது சகஜமான விஷயம். வாழ்க்கையிலும் கூட அப்படிதான் இருக்கும். ஆனால் என்ன நடந்தாலும் நம்முடைய பயிற்சியை தொடர வேண்டும். களத்தில் 100% உழைப்பையும் கொடுக்க வேண்டும். அதேபோல் சீனியர் அணிக்காக ஆடிய போதும், எனக்கு என்ன வகையான பயிற்சி வேண்டுமோ, அதனை உடனடியாக செய்து கொடுக்கிறார்கள். அது எனக்குள் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இங்கிலாந்து மண்ணில் விட்டதை நிச்சயமாக இந்த டி20 தொடரில் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி முதன்மை தொடக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது. இதனால் அவரின் முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.