சண்டிகர்: ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் மாபெரும் சரித்திர சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய வாழ்வா-சாவா போட்டியில், ஒற்றை ஐபிஎல் சீசனில் 60 சிக்சர்களை விளாசிய உலகின் முதல் பேட்டர் என்ற இமாலய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலம், கடந்த 2012ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய போது 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல் படைத்த 59 சிக்சர்கள் என்ற ஆல்-டைம் சாதனையை இந்த இளம் புயல் தகர்த்தெறிந்துள்ளது. இது சர்வதேச ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி களமிறங்கி இருக்கிறது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்சரை பறக்கவிட்டார். இதன்பின் மீண்டும் கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களை குவித்தார். இதனால் உடனடியாக ஷகில் ஹுசைன் அட்டாக்கில் வந்தார். ஆனால் எதற்கும் அசராத வைபவ் சூர்யவன்ஷி அந்த ஓவரிலும் 3 சிக்சர்களை விளாசி 16 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் மூலமாக வைபவ் சூர்யவன்ஷி பிளே ஆஃப் சுற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை சமன் செய்துள்ளார். அதேபோல் இந்த சீசனில் கிறிஸ் கெய்லின் அதிக சிக்சர்கள் சாதனையையும் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி 61 சிக்சர்களுடன் முதலிடத்தில், 59 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் 2வது இடத்திலும், 52 சிக்சர்களுடன் ரஸ்ஸல் 3வது இடத்திலும், மீண்டும் 51 சிக்சர்களுடன் கெய்ல் 4வது இடத்திலும், 45 சிக்சர்களுடன் பட்லர் 5வது இடத்தில் உள்ளனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் 15 வயதில் 600 ரன்களுக்கு மேல் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியை கட்டுப்படுத்த முடியாமல் ஐதராபாத் அணியின் அத்தனை பவுலர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் மைதானத்திலேயே சோகம் அடைந்துள்ளார்.