சர்வாதிகார பிரஷருக்கு இடையிலும்..பாலஸ்தீனத்தை ஆதரித்த ஸ்பெயின்! இந்த வெற்றி ஒரு அரசியல் ஸ்டேட்மெண்ட்

  • நியூயார்க்: விளையாட்டு என்பது வெறும் மைதானத்தோடு முடிந்துவிடுவதில்லை.. அது பல நேரங்களில் விளையாட்டு தாண்டி அரசியல் என்பதை 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி நிரூபித்துள்ளது. நேற்றைய உலகக்கோப்பை இறுதிப்போட்டி அதற்கு ஒரு சிறந்த உதாரணம்!

    Advertisement

    நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இந்த ஆட்டம் கால்பந்து ரசிகர்களைத் தாண்டி உலக அரசியல் அரங்கில் புதிய உலக அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    Advertisement

    உலகக்கோப்பை அரசியல்

    சர்வதேச அளவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் முற்றிலும் மாறுபட்ட கருத்து கொண்ட நாடுகளாக செயல்பட்டு வருகின்றன. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து மிகக்கடுமையாக விமர்சித்து வருவதுடன், பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாகவும் முறைப்படி அங்கீகரித்துள்ளார்.

    மறுபுறம், அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலி இஸ்ரேலுக்கு தனது வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகிறார். இதனால், இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதியபோது, சமூக வலைதளங்களில் இது ஒரு மறைமுக அரசியல் போராகவே பார்க்கப்பட்டது. அதேபோல் இரண்டு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு அரசியலுக்கு ஏற்றபடி இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்திலும் நிலைப்பாடு எடுத்துள்ளனர்.

    Advertisement

    பாலஸ்தீனக் கொடியும் லமின் யமாலும்

    கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்பெயின் அணியின் வளரும் இளம் நட்சத்திரமான லமின் யமால் இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக மாறினார். முன்னதாக, மே 2026ல் பார்சிலோனா கிளப் அணி லா லிகா சாம்பியன் பட்டம் வென்ற கொண்டாட்டத்தின் போது, 18 வயதான யமால் பாலஸ்தீனக் கொடியை ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

    இது உலகளவில் பெரும் வைரலானது. ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் கூட, யமால் மில்லியன் கணக்கான ஸ்பானிய மக்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார், அவரைப் பார்த்து பெருமைப்படுகிறோம் என்று பாராட்டியிருந்தார்.

    Advertisement

    இன்னொரு பக்கம் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கடந்த காலங்களில் இஸ்ரேலுடன் கொண்டிருந்த தொடர்புகளும், அவர் நேரடியாக யூதர்களை போல வழிபட்டதும் யாராலும் மறக்க முடியாது. அதாவது ஒரு பக்கம் பாலஸ்தீன ஆதரவு ஸ்பெயின் இன்னொரு பக்கம் இஸ்ரேல் ஆதரவு அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக இந்த மோதல் பார்க்கப்பட்டது.

    பரபரப்பான இறுதி ஆட்டம்

    அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் நேற்று தொடங்கிய ஆட்டம் ஆக்ரோஷமாக நகர்ந்தது. 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 93-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் அர்ஜென்டினா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது.

    Advertisement

    இதனைச் சாதகமாக்கிக் கொண்ட ஸ்பெயின், 106-வது நிமிடத்தில் அதிரடியாகச் செயல்பட்டது. பெட்ரோ போரோ கொடுத்த கிராஸை, நிகோ வில்லியம்ஸ் தலையால் முட்ட, மாற்று வீரராகக் களம் புகுந்த ஃபெரான் டோரஸ் அதை அட்டகாசமான கோலாக மாற்றினார்.

    அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் 12 சிறப்பான சேவ்களைச் செய்து முறியடித்தாலும், இந்த ஒரு கோலைத் தடுக்க முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

    விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகப் பாலஸ்தீன ஆதரவு நாடான ஸ்பெயினும், அதன் இளம் வீரர் லமின் யமாலும் களத்தில் நின்ற விதம் சமூக வலைதளங்களில் கொண்டாப்பட்டு வருகிறது.

    Advertisement

    மெஸ்ஸியின் இன்னொரு உலகக்கோப்பை கனவு சோகத்துடன் முடிவுக்கு வந்தாலும், ஸ்பெயினின் இந்த சாம்பியன் பட்டம் கால்பந்து வரலாற்றில் மட்டுமின்றி, சர்வதேச அரசியல் வரலாற்றிலும் நீண்ட காலம் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

    English Summary

    How Spain vs Argentina Final created the Israel-Palestine debate again?