10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவ ரெடி.. அப்புறம் தான் இருக்கு ஆபத்து - செங்கோட்டையன் பேச்சு!

  • திருப்பூர்: அதிமுகவில் இருந்து 10, 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவதற்கு ரெடியாக உள்ளனர், அப்புறம் தான் அவர்களுக்கு ஆபத்தே இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தாராபுரம் தேர்தல் பிரசாரத்தின் போது பேசியுள்ளார்.

    Advertisement

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், "அருண் என்று ஒருவரை எடப்பாடி தொகுதியில் நிறுத்தினோம். அவர் பெரிய பக்திமான் மாதிரி கையில் கயிறு, பச்சை வேட்டி கட்டிக் கொண்டு பழநிக்கு நடைபாதையாக சென்று விட்டு உங்களிடம் எம்எல்ஏ சீட் கேட்க வந்துள்ளேன் என்றார்.

    Advertisement

    நான் ஏமாந்தேன், அமைச்சர் அருண்ராஜும் ஏமாந்தார். ஆட்டோவுக்கு பின்னால் நிற்பது போன்ற போஸ் எல்லாம் கொடுத்தார். கடைசியில் பார்த்தால் சில்லரையை வாங்கிக் கொண்டு போய்விட்டார். நான் ஏன் சொல்கிறேன் என்றால் அவர் மட்டும் சும்மா நின்றிருந்தால் போதும். எடப்பாடி தோற்றிருப்பார், ஓட்டே கேட்க வேண்டாம். அதன்பின்னர் அந்த சின்னத்தில் ரெண்டே நாள் ஒருத்தரை டிவி சின்னத்தில் நிறுத்தினோம். 58,000 ஓட்டு வாங்கிவிட்டார். 2 நாளில் 58,000 பேர் டிவிக்கு ஓட்டு போடுகின்றனர் என்றால், விசில் சின்னம் கிடைத்திருந்தால் என்ன ஆகி இருக்கும்?

    ஒரே ஆண்டுகாலத்தில் ஆட்சி மாறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எப்படி மாறும்? அதிமுகவில் ஜெயித்த 47 பேரில் 25 பேர் எங்களுக்கு ஓட்டு போட்டு விட்டனர். 7 பேர் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டனர். எப்படி ஆட்சி மாறும்? என்ன... தோசையை திருப்புவது மாதிரி. இனி இதெல்லாம் சொல்லிட்டு இருந்தீர்கள் என்றால் இப்போது இருப்பவர்களும் போய்விடுவார்கள்.
    தனிப்பட்ட முறையில் நான் சொல்கிறேன். ஒரு 10, 20 பேர் ரெடியாக இருக்கின்றனர். அது எப்போது என்று தெரியவில்லை. அதற்கு அப்புறம் தான் இவர்களுக்கு இருக்கிறது ஆபத்து. அடுத்த முறை தேர்தல் வரும்போது 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்.

    Advertisement

    இவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர், மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து, பெரிய வெற்றியை கண்டு முதல்வராகி ஆட்சி நடத்தலாம் என்று கனவு காண்கிறார்கள். அது நடக்காது. இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நேர்மையான தலைவர் விஜய்.

    இடைத்தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும். தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் பண மோசடிகளுக்கு இடமில்லை என்பதால், பொதுமக்களிடம் யாரும் பணம் கேட்பது கிடையாது.
    ஓராண்டு காலத்திற்குப் பிறகு இந்தியாவே வியக்கும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை வழிநடத்தும் தலைவராக விஜய் இருப்பார். அவரை வீழ்த்துவதற்கு எவரும் தமிழ் மண்ணில் பிறக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Sengottaiyan stated during the Dharapuram election campaign that 10 to 20 MLAs from the AIADMK are ready to join the TVK, and that this poses a real danger to AIADMK.