ஐயோ இப்படி அநியாயம் பண்றீங்களே! கள்ளக்குறிச்சியில் ஆசையாக வளர்த்த 100 மரங்களை வெட்டியதால் கதறிய பெண்

  • கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின் பாதை திட்டத்திற்காக 10 ஆண்டுகளாக ஆசை ஆசையாக வளர்த்த மா, தேக்கு, பப்பாளி உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டதால் விவசாயக் குடும்பத்தினர் அந்த மரங்களை கட்டி பிடித்து அழும் காட்சி காண்போரை கதற செய்தது.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வி. கணவரை விபத்தில் இழந்த இவர், தனது மகனும் பல் மருத்துவருமான பாலமுருகனுடன் இணைந்து, இயற்கை முறையில் பல்வகை பண்ணையை உருவாக்கி பராமரித்து வந்தார்.

    Advertisement

    அப்பாவின் நினைவாகவும், சமூக அக்கறையுடனும் வளர்க்கப்பட்ட மா, தேக்கு, மகோகனி, பப்பாளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலத்தில் பயிரிடப்பட்டு வந்தன.

    ​இந்நிலையில், தியாகதுருகம் பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைப்பதற்காக, அதிகாரிகள் இவர்களது நிலத்தை ஆய்வு செய்தனர். மரங்களுக்கு இடையூறு இல்லாதவாறு மின் பாதையை சற்று தள்ளி அமைக்க வேண்டும் என செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதிகாரிகளும் மாற்று வழி செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போது முறையான ஒப்புதலோ அல்லது முழுமையான இழப்பீடோ வழங்கப்படாமல், காவல்துறையினர் அதிரடியாகக் குவிக்கப்பட்டனர். நிலத்தைச் சுற்றி வளைத்த போலீசார், மருத்துவர் பாலமுருகனையும், அவரது தாயாரையும் அப்புறப்படுத்தினர்.

    Advertisement

    தொடர்ந்து, அவர்கள் கண்முன்னேயே 100-க்கும் மேற்பட்ட மரங்கள் இயந்திரங்கள் மூலம் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. மரங்களைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத செல்வியை, போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ​இதுகுறித்து கண்ணீருடன் பேசிய செல்வி, அதிகாரிகளும் போலீசாரும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். அரசாங்கம் ஒருபுறம் மரம் நடும் திட்டங்களை ஊக்குவிக்கும் வேளையில், 10 ஆண்டுகள் வளர்த்த மரங்களை இப்படி அழிப்பது சமூகத்திற்கே பெரும் கேடு என வேதனையுடன் தெரிவித்தார்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மரங்களை நடுமாறு அரசு சொன்னாலும் பாலம் கட்டுதல், சாலை பணிகள், உயர் மின் அழுத்த கோபுரம் உள்ளிட்ட பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுகிறார்கள். ஒரு வேளை அது விவசாய நிலமாக இருந்தால் அந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை கொடுத்துவிட்டு வெட்டுவது வழக்கம்.

    என்னதான் பாலம் கட்டுவது, சாலை அமைப்பது உள்ளிட்டவை வளர்ச்சி பணிகளாக இருந்தாலும், மரங்களை வெட்டுவதால் சுவாசிக்கும் காற்றில் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. அது போல் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பதால் புவியின் வெப்பநிலை உயர்ந்து பருவநிலை மாற்றங்கள் அதிகரிக்கும்.

    மரங்கள்தான் நீராவியை வளிமண்டலத்திற்கு அனுப்பி மேகங்கள் உருவாகி மழை பெய்ய வழிவகுக்கும். ஆனால் மரங்களை வெட்டுவதால் மழையின் அளவு குறையும். நிலத்தடி நீர் மட்டம் குறையும், பறவைகள், பூச்சிகளின் இயற்கை வாழ்விடம் அழிக்கப்படுகிறது. இதனால் அந்த உயிரினங்கள் அழிவு நிலைக்கு செல்கின்றன.