கும்பகோணம்: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கும்பகோணம் பகுதியில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் 57 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் நிலை என்ன என்பது குறித்து கும்பகோணம் சூப்பர் யாத்ரா சர்வீஸ் உரிமையாளர் பேட்டி அளித்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் மாயமாகி உள்ளனர். திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பெரிய பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டி கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 சுற்றுலா பயணிகளும் நேபாளத்தில் சிக்கி உள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23 ஆம் தேதி இரவு கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இவர்களை கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பயணிகள் இன்று திபெத் நாட்டின் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவர்களை நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் டூரிஸம் அண்ட் டிராவல்ஸ் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், பயணிகளின் நிலை குறித்து கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் செய்தியாளர்களிடம் பேசுகையில் "கடந்த 23 ஆம் தேதி கும்பகோணத்தில் இருந்து கிளம்பியவர்கள் தற்போது திபெத் நாட்டில் சிக்கியுள்ளனர். நேற்று இரவு கூட பேசினேன். இன்று காலை அவர்கள் சென்ற 2 வாகனங்களும் சிக்கின. இன்று காலை 10 மணிக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, 20 பேர் பத்திரமாக இருக்கின்றனர். மீதமுள்ள 37 பேர் தங்களது உடமைகளை இழந்து ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ரஞ்சனி என்பவர் எனக்கு இந்தத் தகவலை கொடுத்தார். எவ்வித தகவல் தொடர்பும் இல்லாத ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் அவர்களை அடிக்கடி தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களாக நம்மை தொடர்பு கொண்டால் மட்டுமே பேசமுடியும். இந்தக் குழுவில் எனது மகன் உமர் பாரூக் (30), அவர்களுக்கு வழிகாட்டியாக சென்றிருக்கிறார். அவர் ஏற்கெனவே இரண்டு முறை நேபாளத்துக்குச் சென்று வந்திருக்கிறார். மற்றவர்களை போலவே எனக்கும், எனது மகன் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுவரை நான் அனுப்பி வைத்த யாத்ரீகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனவே, தற்போதும் அனைவரும் பத்திரமாக மீட்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.கும்பகோணம் பகுதியில் இருந்து
டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி
தொடர்பு கொள்ள முடியவில்லை