தென்காசியின் பல வருட ஏக்கம்.. புளியரை சோதனை சாவடியில் கண்ட காட்சி.. மக்கள் மகிழ்ச்சி

  • தென்காசி: தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திற்கு தினமும் 700க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்த கனிம வள போக்குவரத்துக்கு நேற்று ( 27ஆம் தேதி) முதல் தமிழக அரசு தடை விதித்தது. அதாவது கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்தது. இதை தொடர்ந்து தமிழக கேரளா இல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் இயக்கம் நடைபெற்று வருவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களும் விபத்து இல்லா பயணம் மேற்கொள்ள வாய்ப்பாக உள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    என்ன பிரச்சனை

    தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களை நம்பித்தான் கேரளா இருக்கிறது. இதனால் தமிழக-கேரளா எல்லையான புளியரை சோதனைச் சாவடி வழியாகவும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடி வழியாகவும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தமிழ்நாட்டின் மணல், ஜல்லி, பாறைகள், எம் சாண்ட் உள்பட கனிம வளங்களை ஏற்றி செல்வது நடக்கிறது. இதில் கணிசமான அளவு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகளை பலர் கூறியுள்ளார்கள். சோதனை சாவடிகளில் லஞ்சம் வாங்கி கொண்டு போலீசார் கனிம லாரிகளை அனுமதிப்பதாக அண்மையில் கேரள ஊடகம் இந்த மாத தொடக்கத்தில் செய்திகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

    Advertisement

    கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் என்பதால் 'சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்' ஆக அறிவித்து கேரள மாநில அரசு பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு தமிழ்நாட்டை போல் கனிம வளங்களை மலையில் வெட்டி எடுக்க முடியாது. எனவே தான் தமிழ்நாட்டில் இருந்தே தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களைஏற்றி சென்றபடி இருந்தன. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி இந்த நான்கு மாவட்டங்களிலும் குவாரி பிசினஸ் தான் மெயின் பிசினஸ் ஆக இருக்கிறது. இந்த சூழலில் முறையான அனுமதிச் சீட்டு இல்லாமல் மற்றும் அல்லது ஒரு பாஸை வைத்துக் கொண்டு பலமுறை லாரிகளை ஓட்டும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வலுத்தது.

    Advertisement

    இதனை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கவனத்தில் எடுத்தது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பல வழிகளை கையாண்டது. அதன்படி களியாக்காவிளை, புளியறை வழியாக கனிம வளங்களை கொண்டு செல்ல பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பல டிரைவர்கள் கேரளாவிற்கு செல்லும் கிராம சாலைகளை பயன்படுத்தி கொண்டு செல்ல தொடங்கினார்கள். இதனால அரசு அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது. கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது.இந்த தடை காரணமாக புளியரை சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English Summary

    A sight witnessed at the Puliyarai check-post: The dream of the people of Tenkasi has been fulfilled.