உயர் அதிகாரி டார்ச்சர்.. கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி தற்கொலை


நெல்லை: தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர் அதிகாரியின் தொடர் தொல்லையால் இந்த சோக முடிவை தேடி கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி கோரளம்பள்ளத்தில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்தவர் தமிழ்ச்செல்வி. கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் செந்தில்குமார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இதையடுத்து தமிழ்ச்செல்வி தனியாக வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை முடிந்து வீடு திரும்பிய தமிழ்ச்செல்வி, பின்னர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியபோது, நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில், முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், தமிழ்ச்செல்வியின் உயரதிகாரி ஒருவர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த தமிழ்ச் செல்வி ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனவே, கலெக்டர் அலுவலக உயர் அதிகாரியின் தொல்லையால் தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரியின் தொல்லையால் கணவரை இழந்த பெண் ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்பதே அவரது உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

A woman committed suicide in Tuticorin over alleged torture of his senior officer.