வேளாங்கண்ணி டூ சென்னை ஆம்னி பஸ்.. நள்ளிரவில் கண்ட காட்சி.. ஆடிப்போன பயணிகள்

  • நாகப்பட்டினம்: சென்னைக்கு தினமும் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான ஆம்னி பேருந்துகள் வருகின்றன. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும் ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுகிறது.
    வேளாங்கண்ணியில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் அபாயகரமான ஓட்டை இருந்துள்ளது. இதை பார்த்து ஆடிபபோன பயணிகள் நள்ளிரவில் உரிமையாளரை அழைத்தனர். ஆனால் தீர்வே கிடைக்கவில்லை.

    Advertisement

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புனித தலமான வேளாங்கண்ணிக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட மக்கள் அடிக்கடி வந்து செல்கிறார்கள். தமிழ்நாடு தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து செல்கிறார்கள். சென்னையில் இருந்தும் பலர் வேளாங்கண்ணி மாதாவை காண வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    Advertisement

    கடந்த மே 18ம் தேதி அன்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். இந்த ஆம்னி பஸ் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையில் உள்ள தூசிகள் அனைத்தும் பஸ்சுக்குள் நுழைந்தபடியே இருந்துள்ளது. இதனால் பஸ்சின் உள்ளே இருந்த பயணிகளுக்கு திடீரென தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட தொடங்கியது. நாகை கோர்ட்டு அருகே அந்த பஸ் வந்தபோது பயணிகள் கடுமையான தூசிக்குள் சிக்கினார்கள். இதனால் ஏன் இப்படி ஆகிறது என்று பயணிகள் பார்த்துள்ளனர்.

    Advertisement

    அப்போது பஸ்சின் பின் சக்கரத்துக்கு மேலே ஒரு அபாயகரமான ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டை வழியாகத்தான் சாலையில் உள்ள தூசிகள் அனைத்தும் பஸ்சுக்குள் நுழைந்ததும், பயணி ஒருவரின் தண்ணீர் பாட்டில் அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் திடீரென பஸ்சில் ஏற மறுத்து நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பஸ் உரிமையாளரை பயணிகள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர், பஸ்சை காரைக்கால் கொண்டு வரும்படியும், காரைக்காலில் இருந்து மாற்று பஸ் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். ஆனால் பயணிகள் மாற்று பஸ்சை நாகைக்கு கொண்டு வரும்படி தெரிவித்தனர். ஆனால் நள்ளிரவு நேரமாகியும் மாற்று பஸ் வரவில்லை. மேலும் உரிமையாளரின் செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

    Advertisement

    இந்த நிலையில் அந்த பஸ்சை தொடர்ந்து இயக்க அனுமதி மறுத்த போலீசார் வெளிப்பாளையம் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் அந்த பஸ்சை கொண்டு சென்று நிறுத்தினர். இதையடுத்து அந்த பஸ்சில் வந்த பயணிகள் அரசு பஸ் மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    English Summary

    An Omni bus traveling from Velankanni to Chennai was found to have a big hole in it. Shocked by this discovery, the passengers called the owner at midnight; however, they received no resolution.