திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி

  • சென்னை: முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேகதாது அணை, குறுவை சாகுபடி, கொள்முதல் விலை, பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவசாய பிரச்சனைகள் குறித்து முதல்வர் எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் வென்று முதல்வர் ஆன பிறகும், அறிவிப்புகளை வெளியிடாமல் பரப்புரை செய்வதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய விஜய் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். திமுகவை விமர்சித்தும், இளைஞர்களை 'தற்குறி' என கூறி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதே திமுக தோல்விக்கு காரணம் எனவும் பேசினார்.

    Advertisement

    வாய் திறக்காத விஜய்

    விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், அரசின் திட்டங்கள், புதிய அறிவிப்புகள், மகளிர் உரிமைத் தொகை, தாய்மாமன் திட்டம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து எதேனும் விஜய் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது. இதே போல் மேகதாது திட்டம் குறித்து விஜய் எதாவது பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

    ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் பிரசார பாணியிலேயே விஜய்யின் நேற்றைய பேச்சு இருந்தது. விஜய் தனது பேச்சில் வழக்கம் போல திமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசினார். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜய்யின் இந்த பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    பரப்புரை கூட்டமாகவே இருந்தது

    தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பங்கேற்ற முதலாம் அரசியல் நிகழ்ச்சியான திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக உணவு வழங்கும் உழவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது. முதல்வர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்டம் தேர்தலுக்கு பிந்தைய பரப்புரைக் கூட்டமாகவே அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

    2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற பிறகு, அந்த விழா நடந்த மேடையிலேயே தமது அரசின் பயணம் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்து உரையாற்றினார். அதன்பின் 3 வாரங்களாகிவிட்ட நிலையில், எந்த அரசு விழாவிலும் பங்கேற்று அவர் உரையாற்றவில்லை. அரசின் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

    Advertisement

    காவிரி பாசனத் திட்டம்

    இத்தகைய சூழலில் தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி புனித ஜோசப் கல்லூரித் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அது அரசு விழா அல்ல... அரசியல் நிகழ்ச்சி தான் என்றாலும், முதல்வராக விஜய் அவர்கள் பங்கேற்றும் முதல் பொது மேடை என்பதால், தமிழ்நாட்டுக்காக அவர் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பார்.

    குறிப்பாக பெருமளவில் அவருக்கு வாக்களித்த விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே அவரது உரை அமைந்திருந்தது. திருச்சி மாநகரை தமிழ்நாட்டின் இதயப் பகுதி என்று முதல்வர் விஜய் அவர்கள் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மேலாக காவிரி பாசன மாவட்டத்தின் இதயமும் திருச்சி தான்.

    Advertisement

    காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் இன்றைய பெரும் கவலை குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது தான். ஜூன் 12-ஆம் நாளுக்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது குறித்த நிலைப்பாட்டை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஒருவேளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்றால், நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய வசதியாக தடையில்லா மும்முனை மின்சாரம், குறுவைத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்திருக்க வேண்டும்.

    அதற்கான சிறந்த வாய்ப்பு திருச்சி மேடை ஆகும். ஆனால், மறந்தும் கூட மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடி குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்வது மேகதாது அணைத் திட்டம் ஆகும். கர்நாடகத்தில் மேகதாது அணையை வைத்து அரசியல் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், அணை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அச்சமடைந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையிலான நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளை முதல்வர் விஜய் திருச்சியில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், முதல்வர் விஜய் அவர்கள் அதை செய்யவில்லை.

    Advertisement

    காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்

    காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4500 வீதம் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்பது தான். அதுகுறித்த அறிவிப்புகளும் கூட முதல்வர் விஜய் அவர்களின் திருச்சி பொதுக்கூட்ட உரையில் ஒலிக்கவில்லை.

    திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்ட பாசனத் திட்டங்களில் முதன்மையானது காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 1.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடையும். இத்திட்டப் பணிகள் 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வெறும் 3% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் பகுதி உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த உழவர்களுக்கும் முதல்வர் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.

    மக்களின் தேவைகளை உணர்ந்து

    முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக உழவர்களுக்கு அளித்த மிகப்பெரிய ஏமாற்றம் பயிர்க்கடன் தள்ளுபடி தான். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் கூடுதலான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலையில், வெறும் ரூ.2,000 கோடிக்கும் குறைவான கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நடந்த குளறுபடிகளை முதல்வர் திருச்சியில் சரி செய்வார் என்று பார்த்தால், அதையும் அவர் செய்யவில்லை.

    உரம் விலை உயர்வு, கொள்முதல் நிலையக் குளறுபடிகள், மணல் கொள்ளையை தடுப்பது, ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டுவது என ஏராளமான விஷயங்களில் முதலமைச்சரின் முத்தான அறிவிப்புகளை உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதலமைச்சரோ அது குறித்தெல்லாம் எதையும் பேசாமல் எதிர்க் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் தேர்தல் பரப்புரையைத் தான் நிகழ்த்தினார். தேர்தலில் வென்று முதல்வர் ஆகி விட்ட பிறகும் கூட, அறிவிப்புகளை வெளியிடாமல் பரப்புரையை மட்டுமே செய்வதை ஏற்க முடியாது.

    விஜய் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனியாவது உழவர்கள் மற்றும் தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர் விஜய் அவர்கள் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    English Summary

    Anbumani Ramadoss criticized Chief Minister Vijay’s Trichy speech, alleging it lacked announcements on Mekedatu, Kuruvai cultivation, Mettur dam water release, procurement prices and irrigation projects. He urged the government to address farmers’ concerns and fulfill electoral expectations.