அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை.. சொந்த ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது?

  • தூத்துக்குடி: முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலையில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் நள்ளிரவில் அவர் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மறுத்த மாஜிஸ்திரேட், சொந்த ஜாமீனில் விடுவிக்க அதிரடியாக உத்தரவிட்டார்.

    Advertisement

    திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவையொட்டி கடந்த மாதம் 20ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில தற்போதைய முதல்வர் விஜய் பற்றி பேசியது சர்ச்சையானது.

    Advertisement

    இதுபற்றி தவெக நகர செயலாளர் செல்வம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் வழங்கப்பட்டது. அவரது வழக்கறிஞர் சார்பில் வரும் 10ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் விசாரணைக்கு செல்லும்போது கைது நடவடிக்கையில் சிக்கலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் நினைத்தார். இதனால் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த அடுத்த சிலமணிநேரங்களில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து 6 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர் தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

    அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வர வேண்டும் என்று கூறி 2 முறை சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் மருத்துவ காரணங்களை காட்டி வரும் 10ம் தேதி ஆஜராவதாக கூறினார்கள். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் வழங்க கூடாது'' என்று வாதிட்டார்.

    Advertisement

    அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இந்த வழக்கில் சிறையில் அடைக்க வேண்டிய முகாந்திரம் இல்லை. உண்மையிலேயே அவருக்கு மருத்துவ பிரச்சனை உள்ளது. தற்போது அரசியல் காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தனது சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தார்.

    அதன்படி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்த வேண்டும். 10 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் (ஆத்தூர்) கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி சொந்த ஜாமீனில் விடுவித்தார். இதுபற்றி அறிந்தவுடன் அங்கு கூடியிருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கைகளை தட்டியும், விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Advertisement

    ஜாமீனில் வெளியே வந்த பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''எந்த காலத்திலும் யாருக்கும் திமுகாரரன் அஞ்சமாட்டோம் என்பதற்கான வரலாறு இது. ஆகவே எந்த வகையிலும் எங்களை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண முடியாது.
    ஏறக்குறைய 6 மாத காலத்துக்குள் இந்த ஆட்சி வீழ்ந்துவிடும்'' என்றார்.

    English Summary

    Anitha Radhakrishnan Released: Former Minister and DMK MLA for the Tiruchendur Assembly constituency, Anitha Radhakrishnan, was arrested this morning in connection with a case involving defamatory remarks made against Chief Minister Vijay. When he was produced before the Tiruchendur Magistrate at midnight, the Magistrate refused to remand him to judicial custody and instead issued a surprise order releasing him on his own bond.