ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை விற்ற முருகதாஸ் வீட்டிற்கு சிபிசிஐடி சீல்.. பின்னணி இதுதான்

  • விழுப்புரம்: பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் முருகதாஸ் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் பூட்டை உடைத்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 50க்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முருகதாஸ் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் தண்டபாணி அறக்கட்டளைக்கு சொந்தமானது. இதன் மதிப்பு ரூ.100 கோடியாகும்.

    Advertisement

    இந்த நிலம் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை மீறியும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் இந்த நிலம் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பத்திரப்பதிவும் நடந்தது. இதனை பழனி கோவில் நிர்வாகம் கண்டுபிடித்தது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது கோவில் நிலத்தை முருகதாஸ் என்பவர் வெள்ளதுரை, சேதுபதி ஆகியோருக்கு விற்பனை செய்ததும், இதற்கான பத்திரப்பதிவை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது மொத்தம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாணது. மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Advertisement

    இதில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் பெற்றுள்ளாளர். மற்றபடி நிலத்தை விற்ற முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையே தான் திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீடு, உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என். புதூரை சேர்ந்த சேதுபதி, விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீடு உள்ளிட்டவற்றில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனைகள் மேற்கொண்டனர்.

    ழுப்புரம் காமராஜர் 2வது தெருவில் உள்ள முருகதாஸ் வீட்டிலும் நேற்று சிபிசிஐடி போலீசார் ரெய்டுக்கு சென்றனர். அப்போது முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக சிபிசிஐடி போலீசார் பூட்டை உடைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    Advertisement

    நேற்று காலை முதல் இரவு வரை சோதனைகள் நடந்தன. இந்த சோதனையில் 50க்கும் அதிகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று முருகதாஸ் வீட்டிற்கு சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர். அதுமட்டுமின்றி தலைமறைவாக உள்ள முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    English Summary

    CBCID police conducted a surprise raid yesterday at the home of Murugadas-a key figure in the case involving the sale of Palani Temple-owned land worth Rs.100 crore for just Rs.2 crore-after breaking open the lock. More than 50 documents were seized, and the house has been sealed. While the police are actively searching for Murugadas and his family, shocking details regarding the background of the case have emerged.