உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைக்கு புதிய அறிவிப்புகள்? முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

  • சென்னை: தமிழகத்திற்கு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை விஜய் தலைமையிலான தவெக அரசு ஜூலை மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக முன்னேற்பாடு பணிகளை துறைவாரியாக அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு துறையின் அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதியத்திட்டங்கள் தொடர்பாக, உயர் கல்வி , பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

    Advertisement

    பட்ஜெட் தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அனைத்துத்துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் சாய்குமார் கடந்த மாத இறுதியில் கடிதம் எழுதியிருந்தார. அதில் : "ஜூலை 2-ந்தேதி முதல் 22-ந்தேதிவரை 20 நாட்களுக்கு, காலை மற்றும் மதியம் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். காலையில் நடக்கும் கூட்டம் 11.30 மணிக்கும், மதியம் நடக்கும் கூட்டம் 2.30 மணிக்கும் தொடங்கும். 45 நிமிடங்கள் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களும் அப்போது பங்கேற்பார்கள்.

    Advertisement

    ஜூலை 2-ந்தேதி காலை கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் திட்டங்கள் பற்றியும், அன்று மதியம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படும்.

    ஜூலை 3-ந்தேதி காலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மதியம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை; ஜூலை 6-ந்தேதி காலை, உயர் கல்வித்துறை, மதியம், பள்ளிக்கல்வித் துறை; 7-ந்தேதி காலை, சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை, மதியம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை;

    ஜூலை 8-ந்தேதி காலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்பகல், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை; ஜூலை 9-ந்தேதி காலை தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை, மதியம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை; ஜூலை 13-ந்தேதி காலை வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை, மதியம் பொதுப்பணித் துறை, மாலை (3 மணி) நீர்வளத்துறை திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

    Advertisement

    ஜூலை 14-ந்தேதி காலை கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, மதியம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை; ஜூலை 15-ந்தேதி காலை சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, மதியம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை;

    ஜூலை 16-ந்தேதி காலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மதியம் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை; ஜூலை 17-ந்தேதி காலை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மதியம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை;

    ஜூலை 20-ந்தேதி காலை சுற்றுலா, கலாசாரம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, மதியம் சமய அறநிலையங்கள் துறை; ஜூலை 21-ந்தேதி காலை மனிதவள மேலாண்மைத்துறை, மதியம் இயற்கை வளங்கள் துறை; ஜூலை 22-ந்தேதி காலை திட்டம் மற்றும் வளர்ச்சி, மதியம் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் துறைக்கான குறிப்பிட்ட அம்சங்களை உள்ளடக்கிய சுருக்கமான விளக்கக் காட்சி தொடர்புடைய புகைப்படங்களுடன் கூடிய 20 ஸ்லைடுகளை தயார் செய்ய வேண்டும்" என்று தலைமை செயலாளர் சாய்குமார் அறிவுறுத்தியிருந்தார்.

    Advertisement

    இதன்படியே முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் அதிகாரிகளை அழைத்து காலை மற்றும் மாலை ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், ஜூலை 6ம் தேதியான இன்று காலையில் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். மாலையில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தஆய்வில் அந்தந்த துறையின் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை, உயர் கல்வித்துறையில் அறிவிக்க வேண்டிய புதிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    English Summary

    Chief Minister Vijay is holding consultations today with Education Department officials regarding new schemes for the Higher Education and School Education departments.