உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!

  • சென்னை: தமிழக அரசின் நிர்வாகத்தில் ஒழுங்கீனங்கள் மற்றும் மக்கள் பாதிப்புகளை உடனடியாகத் தீர்க்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் ஒவ்வொரு துறையாக விஜய் மீட்டிங் நடத்த உள்ளாராம்.

    Advertisement

    முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் இதுவரை அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு பதிலாக தனித்தனி துறையாக மீட்டிங் நடத்த உள்ளார். இதன் முதல் கூட்டமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் வசூலிக்கப்படும் 'மாமூல்' விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

    Advertisement

    தேர்தல் பிரச்சாரத்தின்போது "பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை ஒழிப்போம்" என முக்கிய வாக்குறுதி அளித்த முதல்வர் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த முறைகேடு தொடர்வதைக் கண்டு கடும் அதிருப்தி வெளியிட்டார். இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ், துறை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தின் தொடக்கத்திலேயே அதிகாரிகளை நோக்கி கடுமையான கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பிய முதல்வர் விஜய், "எம்.ஆர்.பி விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்கக் கூடாது என்ற உத்தரவு இருந்தும், இந்த ரூ.10 கமிஷன் எப்படி இன்னும் தடையின்றி நடைபெறுகிறது?" என்று கேட்டார்.

    Advertisement

    மேலும், "இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகளில் சிறப்புப் படை ஆய்வு நடத்தப்பட்டது? தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? வெறும் இடமாற்றம் மற்றும் தற்காலிக இடைநீக்கம் மட்டுமே போதாது. ஏன் இன்னும் அனைத்து கடைகளிலும் UPI டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை மற்றும் பார்கோடு ஸ்கேனிங் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை?" என அதிகாரிகளை திணறடித்தார்.

    அமைச்சர் கே. விக்னேஷ் பதிலளிக்கையில், தவறு செய்யும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும், டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் எழுப்பும் நடைமுறைப் பிரச்சினைகளையும் அவர் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

    Advertisement

    ஊழியர்கள் தரப்பில், மதுப் பெட்டிகளை இறக்குவதற்கு ஒரு பெட்டிக்கு 5 ரூபாய் வரை சொந்த செலவு, கடை தூய்மை, உடைந்த பாட்டில்கள், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்கு அரசு நிதி இல்லாதது, குறைந்த ஊதியம் போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற ஊழியர் போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இவற்றைக் கேட்ட முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு எந்தவிதமான கூடுதல் சுமையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க, இறக்குக் கூலி மற்றும் பராமரிப்புச் செலவுகளை அரசே நேரடியாக ஏற்கும் புதிய திட்டத்தை வகுக்க உத்தரவிட்டார். அதேவேளையில், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

    Advertisement

    மேலும், ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் கடைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிரந்தர தீர்வை நிதித்துறையுடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    தொடர் ஆலோசனைக் கூட்டங்கள்

    இந்தக் கூட்டத்தை முதல் கட்டமாகக் கொண்டு, மற்ற துறைகளிலும் இதுபோன்ற மக்கள் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தீர்க்க முதல்வர் விஜய் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளார். விரைவில் பள்ளிக்கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்ளாட்சி உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு துறையிலும் நிலவும் முறைகேடுகளுக்கு உடனடி தீர்வு காண உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Advertisement

    இந்த நடவடிக்கை, தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் முதல்வர் விஜய்யின் உறுதியான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. தமிழக நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்கும் பணியில் முதல்வர் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    CM Vijay to Hold Series of Review Meetings with Ministers - Starts with TASMAC Rs.10 Scam Crackdown