விஜய் பக்கா ராஜதந்திரம்.. தமிழக அரசியல் வரலாற்றில் நடந்த மாபெரும் மாற்றங்களின் பின்னணி!

  • சென்னை கோட்டை இன்று ஒரு புதிய அரசியல் இலக்கணத்திற்கு சாட்சியாக மாறியுள்ளது. மேடைப் பேச்சுகளில் அதிகமாக கேட்ட 'சமூக நீதி' மற்றும் 'அதிகாரப் பகிர்வு' என்ற வார்த்தைகளைக் கேட்டுப் பழகிப்போன தமிழக மக்களுக்கு, அதனைச் செயலிலும் செய்து காட்ட முடியும் என்பதைத் தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலமே நிரூபித்துக் காட்டியிருக்கிறார் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். ஆனால் அங்கு பல ராஜதந்திரங்கள் ஒளிந்துள்ளன.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வரும் நிலையில், இன்று பதவியேற்ற புதிய அமைச்சரவை, திராவிட அரசியலின் எழுதப்படாத விதிகளை சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் உட்பட மொத்தம் 33 பேர் கொண்ட இந்த மாபெரும் அமைச்சரவையில், இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த 23 பேரின் பட்டியலில் ஒளிந்திருக்கும் இரண்டு பிரம்மாண்டமான சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் தான் தற்போது ஒட்டுமொத்த இந்திய அரசியல் நோக்கர்களின் கவனத்தையும் தமிழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

    ஒன்று, விளிம்புநிலை மக்களுக்கான உண்மையான அரசியல் பிரதிநிதித்துவம்; மற்றொன்று, தோழமைக் கட்சிகளுக்கான நேர்மையான அதிகாரப் பகிர்வு.

    அரியணையில் விளிம்புநிலை மக்கள்

    தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் (Scheduled Castes) சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

    Advertisement

    இன்று பதவியேற்ற 23 அமைச்சர்களில் அரக்கோணம் காந்திராஜ், ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு, அவிநாசி கமலி, ராசிபுரம் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ஒட்டப்பிடாரம் மதன் ராஜா உள்ளிட்ட 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சாதாரணமான ஒரு அரசியல் நகர்வு அல்ல. இது பல தசாப்தங்களாக மறுக்கப்பட்டு வந்த ஒரு மாபெரும் உரிமை மீட்டெடுப்பாகும்.

    பொதுவாகத் தமிழக அரசியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அல்லது கால்நடைப் பராமரிப்புத் துறை போன்ற குறிப்பிட்ட சில அமைச்சரவைப் பொறுப்புகளை மட்டுமே பட்டியலினச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிவிட்டு, சமூக நீதியைக் காப்பாற்றிவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    Advertisement

    சில நேரங்களில் அரிதாக வேறு துறைகள் தரப்படும். மிக அதிகப்படியான பட்டியலின எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதியைக் கொள்கையாக முழங்கும் கட்சியாக இருந்தாலும் சரி, அமைச்சரவையில் ஆதிக்கச் சாதியினரின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். ஆனால், புதிய முதலமைச்சர் விஜய் அந்தப் பழமையான சித்தாந்தங்களை அடியோடு மாற்றி எழுதியுள்ளார்.

    அமைச்சரவையில் முன்னேறிய ஜாதிகளுக்கு இணையாக விளிம்புநிலை மக்களின் பிரதிநிதிகளை அமர வைத்து, உண்மையான சமத்துவக் கொள்கையைச் செயல்படுத்தியுள்ளார். அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் முதல் தென் மாவட்டமான ஒட்டப்பிடாரம் வரையிலான பல்வேறு புவியியல் பகுதிகளைச் சேர்ந்த பட்டியலினத் தலைவர்களுக்கு அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, அடிமட்டத் தொண்டர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

    Advertisement

    வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த தங்களுக்கு, முடிவெடுக்கும் அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதை ஒட்டுமொத்தத் தலித் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் வியப்போடு கொண்டாடி வருகின்றனர்.

    1952-க்குப் பிறகு முதல் முறையாக ஒரு உண்மையான கூட்டணி ஆட்சி

    சமூக நீதியில் எப்படி ஒரு பிரம்மாண்டமான பாய்ச்சலை விஜய் நிகழ்த்தியுள்ளாரோ, அதே அளவுக்கு 'அதிகாரப் பகிர்வு' என்ற கூட்டணிக் தர்மத்திலும் அவர் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

    இன்று பதவியேற்ற அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலான 1952-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு உண்மையான கூட்டணி அரசு அமைவது இதுவே முதல் முறையாகும்.

    Advertisement

    1967-ல் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் ஒரு தனித்துவமான அரசியல் கலாச்சாரம் வேரூன்றியது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது தனிப்பெரும்பான்மையுடன் அமைந்தாலும் சரி, அல்லது கூட்டணிக் கட்சிகளின் தயவில் அமைந்தாலும் சரி, அமைச்சரவையில் மட்டும் வேறு எந்தக் கட்சிக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே மிகத் தீவிரமாக இருந்தன.

    "மத்தியில் மட்டும் கூட்டாட்சி, மாநிலத்தில் சொந்த கட்சி ஆட்சி" என்ற ஒரு விசித்திரமான எழுதப்படாத சட்டம் தமிழகத்தில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது.

    குறிப்பாக 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மு.கருணாநிதி தலைமையிலான திமுக வெறும் 96 இடங்களை மட்டுமே வென்று தனிப் பெரும்பான்மையை இழந்தது. அந்தச் சமயத்தில் காங்கிரஸ், பாமக, மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் தான் திமுக மைனாரிட்டி அரசை அமைத்தது.

    அப்போது ஆட்சியைத் தக்கவைக்கக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மிக மிக அவசியமாக இருந்தபோதிலும், மு.கருணாநிதி தனது சாணக்கியத்தனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் பங்கு தர மறுத்துவிட்டார்.

    சோனியா காந்தி வரை நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியும், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று திமுக திட்டவட்டமாக மறுத்து, ஐந்து ஆண்டுகளும் கூட்டணிக் கட்சிகளை வெளியிலிருந்தே ஆதரவு தர வைத்தது.

    மறுபுறம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எப்போதும் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடனே வெற்றியைப் பதிவு செய்து வந்ததால், அவர்களுக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரம் தர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒருபோதும் எழவில்லை.

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணிக் கட்சிகளுக்குச் சீட் ஒதுக்குவதிலேயே கறார் காட்டும் இரு திராவிடக் கட்சிகளும், அவர்களை அதிகார மையத்தின் அருகில் கூடச் செல்ல விட்டதில்லை.

    ஆனால், விஜய் இந்தப் பிடிவாதமான அதிகாரக் குவியலைத் தகர்த்தெறிந்துள்ளார். கூட்டணி என்றால் அது தேர்தலோடு முடிந்துவிடும் ஒன்றல்ல; அது மக்களோடு சேர்ந்து, மக்கள் நலனுக்காக ஐந்து ஆண்டுகளும் இணைந்து பயணிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு என்பதை உணர்ந்து, தமக்குக் கைகொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை இடங்களை வழங்கி அழகு பார்த்துள்ளார்.

    இதன் மூலம், "எங்களுக்கு அதிகார ஆசை இல்லை, எங்களை நம்பி வந்தவர்களை அரவணைத்துச் செல்லத் தயங்க மாட்டோம்" என்ற ஒரு முதிர்ச்சியான அரசியல் செய்தியை இந்தியாவிற்கே அவர் உரக்கச் சொல்லியுள்ளார்.

    தேர்தல் களத்தில் விஜய் தனித்து நிற்பாரா, கூட்டணிகளை எப்படி அனுசரிப்பார் என்று சந்தேகங்களை எழுப்பிய விமர்சகர்களுக்கு, இந்த அதிகாரப் பகிர்வு ஒரு சாட்டையடியாக அமைந்துள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளித்ததன் மூலம், இனி வரும் காலங்களில் தேசியக் கட்சிகளும், சிறுபான்மை அமைப்புகளும், சிறிய பிராந்தியக் கட்சிகளும் எந்தவிதத் தயக்கமுமின்றித் தவெக கூட்டணியை நோக்கி நகரும் ஒரு மாபெரும் ராஜதந்திர வாசலை விஜய் திறந்து வைத்துள்ளார்.

    இதன் மூலம், திருச்சி கிழக்கு இடைத் தேர்தலிலும் கூட்டணி கட்சியினர் முழு உழைப்பை கொட்டி வெற்றி பெற வைப்பார்கள் என்ற ராஜதந்திரமும் இதன் பின்னணியில் உள்ளது. வருங்காலங்களில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு கூட்டணியினர் அழுத்தம் தரவும் ஒரு வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டுவிட்டது.

    வார்த்தைகளில் அல்ல.. செயலில் சமூக நீதி!

    ஒரு சிறந்த தலைவர் என்பவர், தான் சொல்லும் கொள்கைகளைத் தனது அதிகார எல்லைக்குள் முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டுபவராவார். சமூக நீதி, சமத்துவம், மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய வார்த்தைகள் வெறும் மேடை அலங்காரங்கள் அல்ல என்பதைப் புதிய முதலமைச்சரின் இந்த 33 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியல் நிரூபித்துள்ளது.

    பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 7 அமைச்சர்களையும், கூட்டணி தர்மத்தை மதித்துக் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்களையும் உள்ளே கொண்டு வந்ததன் மூலம், தவெக அரசு என்பது அனைவருக்குமான உள்ளடக்கிய அரசு (Inclusive Government) என்பதைச் செயலில் காட்டத் தொடங்கியுள்ளார்.

    எத்தனையோ ஆண்டுகளாக அதிகாரம் மறுக்கப்பட்டவர்களுக்கு, இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டுள்ளன.

    2026-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசியலில் வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் கொண்டுவரவில்லை; அது ஒட்டுமொத்த அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படை இலக்கணத்தையே மாற்றி எழுதியுள்ளது.

    இந்த மாபெரும் சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வுப் பாய்ச்சல், வரும் காலங்களில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் ஒரு மிகச்சிறந்த அரசியல் முன்னுதாரணமாக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    English Summary

    Chief Minister Vijay reshapes Tamil Nadu politics by inducting 7 Scheduled Caste ministers and offering 2 cabinet berths to Congress. A detailed look at how TVK is practicing true social justice and power-sharing, breaking decades of DMK-AIADMK monopolies.