வீடு கட்டும் ஆசையில் விழுந்த மண்.. சல்லுனு உயர்ந்த ஜல்லி விலை! விண்ணைத் தொட்ட எம்.சாண்ட் - பி.சாண்ட்

  • சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்திருப்பது, வீடு கட்டத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொழிலாளர் செலவு, இரும்பு, சிமெண்டு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமானத் துறை, தற்போது மணல் மற்றும் ஜல்லி விலை உயர்வால் மேலும் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறுகின்றனர் பொறியாளர்கள்.

    Advertisement

    தமிழகத்தில் கட்டுமானத் துறையானது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய முக்கியத் துறை. வீடுகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என கட்டுமானப் பணிகளுக்கும் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற பொருட்கள் அடிப்படை தேவைகளாக உள்ளன.

    Advertisement

    இந்த நிலையில் அவற்றின் விலை ஒரே நேரத்தில் உயர்ந்திருப்பது கட்டுமான சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி, முன்பு ரூ.3,300-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி, தற்போது ரூ.500 உயர்ந்து ரூ.3,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் ரூ.4,000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட், ரூ.500 அதிகரித்து ரூ.4,500-ஐ எட்டியுள்ளது. மேலும், கட்டுமானத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் பி.சாண்ட் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை ரூ.5,000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் பி.சாண்ட் தற்போது ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டங்களுக்கு மாவட்டம் விலை உயர்வில் சிறிய அளவிலான வேறுபாடுகள் இருந்தாலும், மாநிலம் முழுவதும் விலை உயர்வு போக்கு காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு கணிசமாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக எரிபொருள் செலவு அதிகரிப்பே சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதன் தாக்கமாக டீசல் மற்றும் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளன.

    ஜல்லி, மணல் போன்ற பொருட்கள் குவாரிகளில் இருந்து லாரிகள் மூலம் நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால், போக்குவரத்து செலவு நேரடியாக விலையில் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமின்றி, பல பகுதிகளில் குவாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. உற்பத்தி குறைவதும், தேவைகள் தொடர்ந்து அதிகரிப்பதும் சந்தையில் பற்றாக்குறை நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் புதிய விலையை நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இந்த திடீர் விலை உயர்வு கட்டுமான நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல திட்டங்களில் செலவினம் அதிகரித்துள்ளதால், கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தாக்கம் பொதுமக்களிடமும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

    தனியாக வீடு கட்டத் திட்டமிட்டுள்ள குடும்பங்கள் பலர் தற்போது செலவு கணக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு வீடு கட்டுவதற்கான மொத்த செலவில் மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களுக்கு முக்கிய பங்கு இருப்பதால், இந்த விலை உயர்வு நேரடியாக கட்டுமான செலவை உயர்த்தும் என கூறப்படுகிறது. மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையினர், விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    குறிப்பாக குவாரி செயல்பாடுகளை சீரமைத்தல், போக்குவரத்து செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள், கட்டுமானப் பொருட்கள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத் துறையானது மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலை, அடுத்த சில மாதங்களில் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    English Summary

    Jally, M-Sand and P-Sand prices rise sharply across Tamil Nadu, increasing construction costs and burdening home builders.