காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றவர் பட்டப் பகலில் கொலை - திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்!

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற கொலை குற்றவாளி வீரபத்திரன் என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் சென்றபோது இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    Advertisement

    ​திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில், திமுக பிரமுகர் 'பாத்ரூம்' முருகன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரபத்திரன் இன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான பாத்ரூம் முருகன், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்தது.

    இவ்வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

    ​இந்நிலையில், முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன், இன்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலை, நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.

    Advertisement

    அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து வீரபத்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இத்தாக்குதலின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரது மனைவி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். ​இந்நிலையில், கொலையாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Veerabathiran, a convicted murderer, was hacked to death in broad daylight while visiting the Sanarpatti police station in Dindigul district to sign the register.